நீர்கொழும்பு அல் – பலாஹ் கல்லூரியிலிருந்து இம்முறை 22 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி
அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, நீர்கொழும்பு கல்வி வலயத்தில் நீர்கொழும்பு அல் – பலாஹ் கல்லூரி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது.
இக்கல்லூரியில் நான்கு பாட நெறிகளின் கீழ் 25 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், அவர்களில் 22 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளதாக, கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.யூ. பாயிஸ் (நளீமி) தெரிவித்துள்ளார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் 88% சதவீதமாகும்.
நீர்கொழும்பு வலய மட்டத்தில் 58 பாடசாலைகளில் 5 ஆம் இடத்தைப் பெற்றுள்ள இக்கல்லூரியிலிருந்து, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 03 மாணவர்களும், பௌதீக விஞ்ஞானப் பிரிவில் 03 மாணவர்களும், வர்த்தகப் பிரிவில் 05 மாணவர்களும், கலைப் பிரிவில் 11 மாணவர்களும் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாணவி ஐ.எச்.எப். இஷ்கா, பௌதீக விஞ்ஞானப் பிரிவில் மாணவன் ஏ.எம். அப்துல்லாஹ், வர்த்தகப் பிரிவில் மாணவன் ஆர்.ஆர்.ஜே.எஸ்.எம். தன்வீர், கலைப் பிரிவில் மாணவி எம். ஆர்.எப். அம்னா ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, மண்ணுக்கும் கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த அபார வெற்றி, கல்லூரி மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டல் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கம் (OBA), பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) மற்றும் நலன் விரும்பிகளின் பலமான ஆதரவு ஆகியவற்றிற்கு சான்றாகும் என்றும் அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


( ஐ. ஏ. காதிர் கான் )
