ரம்பாவ விபத்தில் ஒருவர் பலி.மற்றொருவர் படு காயம்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர் அனுராதபுரம் யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் ரம்பாவ கங்காராம விஹாரைக்கு அருகாமையில் தனியார் பஸ், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டி சாரதி படுகாமடைந்த நிலையில் (05) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் மிஹிந்தலை வீதி ரம்பாவயில் வசித்து வரும் இளங்கசிறி விதானலாகே நிமல் சுபசிங்க என்ற (75) வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் இக்கிரிகொல்லாவ வஹமல்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே காயமடைந்துள்ளார்.உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் ரம்பாவ நகரில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்திற்குள்ளாகிய நிலையில் வீதியை விட்டு விலகிச் சென்று வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய46 வயதுடைய மடாட்டுகம பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
