உள்நாடு

நான்கு அரச சாகித்திய விருதுகளைப் பெற்று இலக்கிய உலகில் பவனி வரும் இலங்கைப் பாடகி ஜீ. அருந்தவம் அருணா

கண்டியில் பிறந்து , யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் வளர்ந்து, கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இலங்கைப் பாடகி ஜீ. அருந்தவம் அருணா, 2024 ஆம் ஆண்டு ஒரே தடவையில் நான்கு அரச சாகித்திய விருதுகளைப் பெற்று, இலக்கிய உலகில் சாதனை படைத்துள்ளார்.

இவரது கலைப்பயணத்தை, 14 வயதிலேயே ஆரம்பித்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மேடைகளில் பாடி, பல சான்றிதழ்களையும் பரிசில்களையும் தட்டிக் கொண்டுள்ளார். நாட்டு நிலைமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக, கடந்த 10 வருடங்களாகத் தடைப்பட்டிருந்த இவரது கலைப்பயணம் மீண்டும் ஆரம்பித்து, புதுப்பொழிவு பெற்று, இன்று மேடைப் பாடகியாகவும், “இலங்கை அல்பம்” பாடல்களையும் இவராகவே எழுதி வெளியிட்டு வருகின்றார்.

இலக்கியப் பகுதியிலும் ஆர்வம் காட்டி கவிதைகள், சிறு கதைகள், கவிக்கலங்கள் எழுதி வருவதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், கொழும்பில் மாதாந்தம் பௌர்ணமி திங்களன்று இடம்பெற்று வரும் “வகவம்” கவியரங்கம் நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கு கொண்டு “கவிமழை” பொழிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இது தவிர, இலங்கை – இந்திய மண்ணில் பல விருதுகளையும், ஆளுமைப் பெண் ( International award )விருதுகளையும் சுவீகரித்து, இலங்கை – இந்தியா இணைந்து நடத்திய “கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம்” உலக சாதனை கவிதைத் தொகுப்பு நூலில் இவரது கவிதைகளும் இடம்பெற்று சான்றிதழ்களையும், கேடயங்களையும் பெற்று பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்.

அரச “தேசபந்து” விருதும், 2024 இல் கலை கலாசார அரச விருதுகள் நான்கையும் பெற்று, தன்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கும், கல்வித் தாகம் தீர்த்த ஆசான்களுக்கும், இலக்கிய உலக அன்பர்களுக்கும், இலங்கைத் தாய்த்திரு நாட்டிற்கும் பேரும் புகழும் ஈட்டிக் கொடுத்திருப்பதை, தனது பெரும் பாக்கியமாகக் கருதி, இலங்கைப் பாடகி ஜீ. அருந்தவம் அருணா பெருமிதம் கொள்கின்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *