உள்நாடு

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க. பொ. த சாதாரண தரம் மற்றும் க. பொ. த. உயர்தர பரீட்சைகளில் சித்தி அடைந்து சாதனை படைத்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் (30) பாடசாலையின் அதிபர் ஐ. என். எம். எம். லாஹிர் தலைமையில் கொத்தாந்தீவு ஜும்ஆப் பள்ளி கலாச்சார மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் ஏ.சீ.எம் நபீல், புத்தளம் தெற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். நௌசாத், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர்களான எஸ்.எம்.எம். ஹனிபா, ஏ.எச்.எம். ஹபீஸ் மற்றும் கொத்தாந்தீவு ஜும்ஆப் பள்ளித் தலைவர் கே.எம். இம்தியாஸ் ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவ, மாணவியர் சங்கம் உட்பட அதன் உறுப்பினர்கள் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அதிதிகளால் சாதனையாளர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை அதிதிகளில் ஒருவராக பங்கேற்ற நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் ஏ.சீ.எம். நபீல் அவர்களுக்கு
பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

குறித்த நிகழ்வுக்கான ஏற்பாட்டினை பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவ, மாணவியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜுனைத் எம். ஹாரிஸ் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியதுடன், இதற்கு உதவியாக பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஏ. நியாஸ் அறிவிப்பாளராக செயற்பட்டார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *