ஆசிய ரைசிங் ஸ்டார்ஸ் கிண்ண இறுதிப் போட்டி; திரில் வெற்றியுடன் சம்பியன் மகுடம் சூடியது இலங்கை
2026 ஆம் ஆண்டுக்கான DP World ஆகிய ரைசிங் ஸ்டார்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ‘A’ அணியை ஒரு விக்கெட்டால் வீழ்த்திய இலங்கை ‘A’ அணி திரில் வெற்றியுடன் 3ஆவது முறையாக சம்பியன் பட்டத்தைத் தனதாக்கி அசத்தியது.
கட்டாரில் இடம்பெற்று வந்து ஆசிய ரைசிங் ஸ்டார்ஸ் ஒருநாள் தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் பலமிகக் இந்திய A அணியை வீழ்த்திய இலங்கை A அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் A அணியை வீழ்த்திய பாகிஸ்தான் A அணி இறுதி ஆட்டத்திற்கான தமது வருகையை உறுதி செய்திருந்தது.
அதற்கமைய தொடரின் சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று (29) கட்டாரில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் A அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதற்கமைய இலங்கையின் சிறப்பான பந்து வீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் அணியால் பாகிஸ்தான் A அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஷஹ்சைப் கான் 91 பந்துகளில் 60 ஓட்டங்களையும், ஷமில் ஹுசைன் 43 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்டக் குவிப்பிற்கு துணை நின்றனர்.
இலங்கை A அணியின் சார்பில் பந்துவீச்சில் ரவிந்து பெர்னாண்டோ 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கருக சங்கேத் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பாகிஸ்தான் A அணியால் நிர்ணயிக்கப்பட்ட 217 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி, 41.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தியது.
ஒரு கட்டத்தில் 140 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் வெற்றியை அண்மித்த இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழக்க இறுதியில் ஒரு விக்கெட் மீதமிருக்க 15 ஓட்டங்கள் தேவையாய் இருக்கும் நிலை ஏற்பட்டது. இக் கட்டத்தில் இறுதி விக்கெட்டில் இணைந்த லஹிரு மற்றும் ஹருகே ஆகியோர் இலங்கையின் வெற்றியை உறுதி செய்ய ஒரு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இலங்கை A அணி 3ஆவது முறையாக ஆசிய ரைசிங் ஸ்டார்ஸ் சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியது.
மேலும் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்கா 95 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் பவன் ரத்நாயக்க 39 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
பாகிஸ்தான் ‘A’ அணியின் பந்துவீச்சில் அலி ரஸா 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுஃப்யான் மொகீம் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை ‘A’ அணி, ஆசிய ரைசிங் ஸ்டார்ஸ் கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளது.
(அரபாத் பஹர்தீன்)
