ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுதாபச் செய்தி
சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மூத்த உறுப்பினருமான ‘கலாபூஷணம்’ எம்.ஜே.எம். தாஜுத்தீன் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைகின்றது.
நீர்கொழும்பு, பலகத்துறை மண்ணில் 1949 மார்ச் மாதம் 12 ஆம் திகதி பிறந்த அன்னார், தமது 78 ஆவது வயதில் நேற்று (12.11.2026) காலமானார்.
இலங்கை தமிழ் ஊடகத்துறையில் பல தசாப்த காலமாகப் பணியாற்றி அழியா முத்திரை பதித்த அன்னார், ‘தினபதி’, ‘சிந்தாமணி’ மற்றும் ‘தினகரன்’ ஆகிய தேசிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றித் தமது ஆளுமையை வெளிப்படுத்தியவர். குறிப்பாக, ‘தினபதி’ பத்திரிகையில்’இஸ்லாமிய பூங்கா’ மற்றும் தினகரன் பத்திரிகையில் ‘ஆலமுல் இஸ்லாம்’ போன்ற சிறப்புப் பக்கங்களுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அதன் ஊடாகப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தார்.
‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னரும் ஊடகப் பணியைத் தொடர்ந்த அவர், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான news.lk பிரதம ஆசிரியராக பணியாற்றி தனது பங்களிப்பை வழங்கினார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்டகால உறுப்பினராக விளங்கியதுடன், கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவராகத் தமது இறுதி மூச்சு வரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அத்துடன், பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவராக இருந்து, பிரதேச கலை, இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைத்துப் பல நிகழ்வுகளை முன்னெடுத்த அவரது இழப்பு, தமிழ் ஊடக உலகிற்கும் நீர்கொழும்பு மண்ணிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது நற்பணிகளை ஏற்றுக்கொண்டு, மண்ணறை வாழ்வை ஒளிமயமாக்கி, மேலான சுவர்க்கத்தை (ஜன்னத்துல் பிர்தௌஸ்) வழங்குவானாக எனப் பிரார்த்திக்கின்றோம்.
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.பாஹிம்
