உள்நாடு

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த மூன்று பிக்குகள்

ருவான்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி ஆகிய புனித இடங்களை உள்ளடக்கிய பகுதியிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மேலும் இரண்டு பிக்குகள் இன்று (11) சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ருவன்வெலிசாய அருகில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த போராட்டத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பல பௌத்த பிக்குகள் கலந்துகொண்டு, தமது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களத்தினால் 2026 பெப்ரவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தை 28 சதுர கிலோமீற்றரிலிருந்து 38 சதுர கிலோமீற்றராக விரிவுபடுத்தும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் கீழ் யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

எனினும், இந்தத் திட்டம் பௌத்த மதத்தின் தொன்மை மற்றும் புனிதத் தன்மையைப் பாதிக்கக்கூடும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உள்ளிட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், போராட்டம் இடம்பெற்ற இடத்தில் தற்காலிகக் கட்டமைப்புகளை அமைக்க முயன்றபோது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி அமைந்துள்ள புனிதப் பகுதிகளில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *