சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மாணவன், ஜினாஸ் தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் வரலாற்றுச் சாதனை
விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 55ஆவது சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் தேசிய மட்டப் போட்டியில், கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலய மாணவன் எம்.ஜெ.எம். ஜினாஸ் சிறப்பான சாதனையொன்றைப் படைத்துள்ளார்.
கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில், 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் (Shot Put) நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஜினாஸ், 11.45 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதிலுமிருந்து பங்குபற்றிய 62 போட்டியாளர்களுக்கு மத்தியில் தனது திறமையை நிரூபித்த அவர், சிறந்த எட்டு வீரர்களில் ஒருவராக (Best Eight) தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய மட்டத்தில் இவ்வாறானதொரு நிலையை எட்டியுள்ள மாணவன் ஜினாஸின் சாதனை, கிராமப்புறப் பாடசாலைகளில் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இம்மாணவனின் திறமையை இனங்கண்டு பயிற்றுவித்து வழிப்படுத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அலிசாதிக் அவர்களுக்கும், பாடசாலை அதிபர் எம்.எம்.ஹிர்பஹான், இணைப்பாடவிதான உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாணவன் ஜினாஸின் இந்த வெற்றி, எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மேலும் பல சாதனைகளைப் படைப்பதற்கான ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(நூருல் ஹுதா உமர்)
