இடைநிறுத்தப்பட்ட பசறிச்சேனை உப தபால் அதிபர்; மீண்டும் அதே இடத்திற்கு நியமனம்தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவும்- பிரதியமைச்சர் கௌசல்யா தபால் மாஅதிபருக்கு பணிப்பு
இடைநிறுத்தப்பட்ட பொத்துவில், பசறிச்சேனை உப தபால் அதிபரை மீண்டும் அதே இடத்திற்கு நியமித்துள்ளமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தபால் மா அதிபர் ருவான் சரத்குமாரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இடைநிறுத்தப்பட்ட பசறிச்சேனை உப-தபால் அதிபரை மீண்டும் பசறிச்சேனைக்கு நியமிக்க வேண்டாம் என பொத்துவில் பசறிச்சேனை பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்தும் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து திகாமடுல்ல பாராளுமன்ற ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நேற்று பிரதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இச்சமயமே பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன மேற்படி பணிப்புரையை விடுத்தார்.
பிரதியமைச்சரை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமா லெப்பை, பசறிச்சேனை உப-தபால் அதிபர் ஆயிரக்கணக்கான கடிதங்களை தனது காரியாலயத்திலும் அவரது இல்லத்திலும் மறைத்து வைத்திருந்தார். பொது மக்களின் கடிதங்களை அவர்களிடம் ஒப்படைக்காததால் பசறிச்சேனை மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய
குறித்த உப தபால் அதிபர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த உப-தபால் அதிபரை மீண்டும் பசறிச்சேனைக்கு நியமிக்க வேண்டாமென பொத்துவில் பசறிச்சேனை பொதுமக்கள், பிரதேச சபையின் பிரதித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்தும் கடந்த 04 ஆம் திகதி குறிப்பிட்ட உப-தபால் அதிபர் மீண்டும் பசறிச்சேனை உப-தபால் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு எதிராக பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இது விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி பசறிச்சேனை மக்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், மக்களின் கோரிக்கைக் கடிதங்களையும் பிரதியமைச்சரிடம் கையளித்தார்.
இவ்விடயங்களைக் கேட்டறிந்த பிரதியமைச்சர் பசறிச்சேனை உப-தபால் அதிபர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தபால் மாஅதிபருக்கு பணிப்புரை வழங்கினார்.
