உள்நாடு

நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 56 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டடம் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 56 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (29.10.2026) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டார். மேலும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஏனைய கல்வி அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய கட்டடம், மாணவிகளுக்கான கற்றல் சூழலை மேலும் மேம்படுத்துவதற்கும், கல்வி நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மாணவர்களின் கற்றல் அடைவுகளை ஊக்குவிப்பதிலும், பாடசாலைகளில் தரமான கல்விச் சூழலை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், 56 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடம், நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தி, கல்வி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இத்தகைய அபிவிருத்திப் பணிகள், அவர்களின் எதிர்காலக் கல்வி முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் எனக் கல்விச் சமூகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *