உள்நாடு

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு பிரதமரின் பணிப்புரை

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தனது முன்மொழிவில் கிழக்கு மாகாண பாடசாலைகளில் மூன்றாம் தரப் பாடசாலைப் பணியாளர் நியமனம் பெற்று 10 வருட சேவையை நிறைவு செய்தவர்களுக்கு இரண்டாம் தரப் பாடசாலைப் பணியாளர் என்ற பதவிப் பெயரில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும், இரண்டாம் தரப் பாடசாலைப் பணியாளர் பதவியில் 9 வருட சேவையை நிறைவு செய்தவர்களுக்கு விசேட தரப் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எனினும், கிழக்கு மாகாண பாடசாலைப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும்போது அவர்களின் பதவிப் பெயர்களில் மாற்றங்கள் செய்யப்படாமல் பாடசாலைப் பணியாளர் என்ற பொதுப் பெயரிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது.

மத்திய அரசாங்கக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாடசாலைகள் மற்றும் மேல் மாகாணம், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மாகாணப் பாடசாலைகளில் மூன்றாம் தரப் பாடசாலைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு 10 வருட சேவையை நிறைவு செய்தவர்களுக்கு இரண்டாம் தரப் பதவி உயர்வு வழங்கப்படும்போது பாடசாலை ஆய்வுகூட உதவியாளர், பாடசாலை நூலக உதவியாளர், பாடசாலை அலுவலக உதவியாளர், பாடசாலை காவலாளி போன்ற பதவிப் பெயர்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரே நாட்டில் மாகாண சபைகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஏனைய மாகாணங்களில் ஒரு நடைமுறையும் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் வேறொரு நடைமுறையும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் பணியாளர்களின் பதவிப் பெயர்களை மாற்றுவதற்கான கோரிக்கைகள் 2016ஆம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சிடமும் மாகாணக் கல்வி அமைச்சிடமும் முன்வைக்கப்பட்டு வந்தபோதிலும் இதுவரை அவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

எனவே, கிழக்கு மாகாணப் பாடசாலைப் பணியாளர்களின் பதவிப் பெயர் மாற்றங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.ஆர்.ஹசந்தியிடம் பிரதமர் இது தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.

இதற்குப் பதிலளித்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்திடமிருந்தும் இது தொடர்பான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், பணியாளர்களின் பதவிப் பெயர்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணப் பாடசாலைப் பணியாளர்களின் பதவிப் பெயர் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *