உள்நாடு

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி அரசியல் பிரிவு தலைவிக்கும் இடையில் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி அரசியல் பிரிவு தலைவி திருமதி கரோலினா மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஏ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நேற்று (27) கொழும்பில் இடம்பெற்றது.

இங்கு சுகாதாரத் துறையில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கொரோனா பிரேதங்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமை தொடர்பாக இதுவரை சுயாதீன விசாரணை நடத்தப்படாமை முதல், கல்முனை வடக்கு வைத்தியசாலையில் ஹிஜாப் தடை, அக்குறணை மற்றும் ஏறாவூர் சம்பவங்கள் வரையிலான தற்போது நடைபெறும் சம்பவத் தொடர்கள் தனித்த சம்பவங்கள் அல்ல என்பதை நாம் சுட்டிக்காட்டினோம்.

இந்த வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பாக அரசாங்கம் முறைப்பாடு ஒன்றைக் கோருகின்ற போதிலும், கடந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்களின் போது முறைப்பாடு இன்றியே பொலிஸார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்த வரலாறு உள்ளது. ICCPR மற்றும் Online Safety Act போன்ற சட்டங்கள் உள்ள ஒரு நாட்டில் இந்த தெரிவு செய்யப்பட்ட மௌனம் சட்டத்தின் சமமற்ற அமுலாக்கம் என முஸ்லிம் சமூகம் கருதுவதாகவும், அது நம்பிக்கையை சீர்குலைப்பதாகவும் நாம் வலியுறுத்தினோம். சில சந்தர்ப்பங்களில் சமூகத்தின் உணர்வுபூர்வமான சம்பவங்களில் உடனடியாக தலையிடும் அரசாங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்பு கூட உள்ள கல்முனை விவகாரத்தில் மௌனமாக இருப்பது இரட்டை நிலைப்பாடாக நாம் சுட்டிக்காட்டினோம்.

1948 முதல் இருந்த ஒவ்வொரு அரசாங்கத்திலும் இருந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் அமைச்சரவை பிரதிநிதித்துவம் தற்போதைய அரசாங்கத்தில் இல்லாமை மற்றும் சபாநாயகர், எரிசக்தி அமைச்சர் போன்ற வெற்றிடங்களுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் பரிசீலிக்கப்படாமை குறித்தும் நாம் கருத்துக்களை முன்வைத்ததுடன், இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தோம்.

இந்த அனைத்து புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் சமூகம் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கு முக்கிய காரணம், கடந்த காலத்தில் நாட்டில் நடந்த இனவாத கலவரங்கள் இந்த ஆட்சியில் அணுவளவும் நடக்காததே ஆகும். ஆனால் நிர்வாக இயந்திரத்திற்குள் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து நடந்தால், ஜனநாயகத்தை நம்பும் இளைஞர் தலைமுறையினரிடையே அவநம்பிக்கை ஏற்படலாம். ஈஸ்டர் தாக்குதல் போன்ற புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்ட துயரங்களில், இத்தகைய குறைபாடுகளே தீவிரவாதிகள் இளைஞர்களை சேர்த்துக்கொள்வதற்கான முதலீடாக அமைந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இத்தகைய சம்பவங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு தூண்டுதலாக அமையாமல் இருக்க அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.

இறுதியாக, ஊழலுக்கு எதிராக ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் மீது அனைத்து மக்கள் பிரிவினரிடமும் உள்ள நம்பிக்கையை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு என்றும், கொள்கைகள் அடிக்கடி மாறுவதால் நாடு பின்னடைவை சந்திப்பதால், குறைந்தபட்சம் இரண்டு பதவிக் காலங்களாவது ஸ்திரமான, வலுவான அரசாங்கம் இருக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாம் வலியுறுத்தினோம்.

ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்
செயலாளர் நாயகம்
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு (UPA)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *