முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கையை இல்லாமல் செய்தவர் கோட்டாபய ராஜபக்சவே; அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றில் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நமது நாட்டில் 30 வருடகாலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பதற்காக நாட்டு மக்களிடையே அவருக்கு ஒரு கௌரவம் இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கையை இல்லாமல் செய்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே என நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் தொடர்பான திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை
நமது நாட்டில் போதைப்பொருள் இல்லாத சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசியத் திட்டத்திற்கு நாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
போதைப்பொருள் பாவனையால் நமது சமூகம் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். எனவே, இவ்விடயத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நமது நாட்டின் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலம் முதல் இதுவரை தமிழ் பேசும் மக்கள் அரசியல் தலைவர்களுக்கு பெரும் ஆதரவை வழங்கி வந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நமது நாட்டில் 30 ஆண்டுகளாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆனால், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அதேவேளையில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கியிருந்தால், மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கை வேறொரு நிலையை அடைந்திருக்கலாம். அவர் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையைப் பாதித்ததில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகளும் முக்கிய பங்கு வகித்தன என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார். அக்காலப்பகுதியில், பொதுபல சேனா அமைப்பின் இனவாதச் செயற்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அந்த அமைப்பின் அலுவலகத்தை கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்தார் என்பது நாடறிந்த உண்மை ஆகும்.
அண்மையில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களைச் சந்தித்த மதிப்பிற்குரிய பௌத்த மதத் தலைவர்கள் ஞானசார தேரருக்கு மண்ணிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன் ஞானசார தேரரின் காவி உடை சிறைச்சாலை அதிகாரிகளினால் கழட்டப்பட்டமைக்கும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.
ஜனாதிபதி அவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புகளில் நிறைவேற்று அதிகாரத்தை தலையிட யாரும் கோரக்கூடாது எனவும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எல்லோரும் மதிப்புக் கொடுத்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இதன்பின் ஞானசார தேரருக்கு மண்ணிப்பு வழங்க வேண்டும், காவி உடையை அணிவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பௌத்த மதத் தலைவர்கள் கண்டியிலிருந்து 06 நாட்கள் கொழும்பை நோக்கி பாதை யாத்திரை செய்வதாக அறிவித்தனர். இதன் பின் பௌத்த மதத் தலைவர்கள் சிறையில் இருக்கும் போது காவி உடையை அணிவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விசேட குழு நியமனம் செய்து கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதை யாத்திரை வருவதற்கு முன் சிறைச்சாலையில் பௌத்த தலைவர்கள் காவி உடையை அணியலாம் என்ற தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்தது.
இந்த விடயத்தில் சகல மார்க்கத் தலைவர்களுக்கும் மதிப்பளிக்க கூடிய வகையில் சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நமது நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாக்குகளை அளித்து ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி உள்ளனர் என்பதனை நான் ஆளும் கட்சிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். எமது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை இப் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை நினைவூட்ட விரும்புகின்றேன்.
கடந்த 2 1/2 வருடங்களாக இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக சவூதி அரேபியா அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட புனித அல்-குர்ஆன் பிரதிகள் இலங்கை சுங்கத் திணைக்கள தடை செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இப் புனித குர்ஆன்களை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் தற்போதைய அரசாங்கத்திடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ஒன்றிணைந்து ஏகமானதாக ஒப்பமிட்டு எங்களின் புனித குர்ஆனை விடுதலை செய்யுமாறும், மதிப்பாய்வுக் குழுவை களைக்குமாறும் கௌரவ அமைச்சரிடம் 21.10.2025 ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தை அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் கையளித்தோம். (அக்கடிதத்தின் பிரதியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்).
கையெழுத்து இட்டு இன்றுடன் ஒரு வருடம் சென்றுவிட்டன எதுவும் இதுவரை நடைபெறவில்லை. என்பதனை எமது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது, இப்பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், “முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து பழிவாங்குறீர்கள். முஸ்லிம்களின் சாபம் உங்களுக்கு வரும்” எனத் தைரியமாகத் தெரிவித்திருந்தார்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் அரசாங்கமே கவிழ்ந்தது என்பது வரலாறாகும் என்பதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இதேபோன்று, தற்போதைய அரசாங்கமும் எமது புனித அல்குர்ஆனை விடுவிப்பதற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், முஸ்லிம் சமூகத்தின் சாபம் யார் யாருக்கு வரப்போகின்றது என்பது தெரியாது எனப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த 05 வருட காலமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் எமது கல்லூரிகளை பதிவு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 83 அரபுக் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் பதிவு செய்யப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விடயமாக சென்ற 22.07.2026 பாராளுமன்றத்தில் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் வாய்மூல பதிலுக்கான கேள்வியினை கேட்டிருந்தேன். எங்களின் அரபுக் கல்லூரிகள் பதிவு தொடர்பான பதிலளித்த கௌரவ அமைச்சர் கூடிய கவனம் செலுத்தி முஸ்லிம் அரபுக் கல்லூரிகளில் பதிவுகளை மேற்கொள்வதாக பதில் அளித்தார். 03 மாதங்கள் சென்றும் எமது அரபுக் கல்லூரிகளில் பதிவுகள் நடைபெறவில்லை என்பதனை கவலையுடன் சபையில் பதிவு செய்கிறேன்.
கல்முனை-வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் நியமனம் பெற்று சென்ற் 05 முஸ்லிம் பெண் உதவியாளர்களை இனவாதங்களின் நிகழ்ச்சி நிரலில் இயங்கி கல்முனை-வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்துவிட்டு சீலைத் துண்டுக்காக பிரச்சினைப்பட வேண்டாம் என்று கூறினீர்கள் ஆனால் இன்று அதே சீலைத்துண்டுக்காக நீங்கள் எவ்வளவு இறங்கி வந்துள்ளீர்கள் என்பதனை இந்த நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது முஸ்லிம் சமூகம் நடுநிலையான சமூகமாகும். ஒருபோதும் முஸ்லிம் மக்கள் பழிக்குப் பழி வாங்குவதில்லை. எப்போதும் பொறுமையுடன் வாழும் சமூகமாக எமது சமூகம் இருந்து வருகின்றது.
எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் ஐக்கியத்திற்கும் முஸ்லிம் சமூகம் பாரிய அர்ப்பணிப்புகளை வழங்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயங்கள் இழைக்கப்படும்போதெல்லாம் நாம் பொறுமையாக இருந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். இந்த உலகில் அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக்கொள்கின்றான்.
உங்களிடம் இனவாதம் உண்மையில் இல்லையெனில்
தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் 40,000 புனித அல்-குர்ஆன்களை விடுவியுங்கள்
சுகாதார உதவியாளர்களின் சீருடை விடயமாக மனித உரிமை ஆணைக்குழுவின் பணிபுரியை அமல்படுத்துங்கள்
தடை செய்யப்பட்டுள்ள 83 முஸ்லிம் அரபுக் கல்லூரிகளின் பதிவுகளை வழங்குங்கள்.
