இலங்கை சக்தி தொலைக்காட்சியின் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உலகப் புகழ்பெற்ற அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீதுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
அப்துல் ஹமீது கொழும்பு நகரில், தெமட்டகொடை என்ற புறநகர்ப் பகுதியில், பாவா ஹசன், ஹாசியா உம்மா ஆகியோருக்கு, 11.04.1949 ஆம் ஆண்டு நான்காவது மகனாகப் பிறந்தவர் ஆவார். இவருக்கு மூத்தவர்கள் மூவரும் ஆண் சகோதரர்கள். இவருக்கு மூன்றரை வயதிருக்கும் போதே, தந்தையார் காலமாகி விட்டார். தாயார் கடையப்பம் தயாரித்து தர, அதை இவர் சுமந்து விற்று வருவார்.
ஆரம்பக் கல்வியை தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். அங்கு இவர் ஆ. பொன்னுத்துரை, பண்டிதர் சிவலிங்கம், ஆகியோரிடம் தமிழ் கற்றார். பள்ளியில் படித்த காலத்திலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1960 ஆம் ஆண்டில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடித்து லடிஸ் வீரமணியின் பாராட்டைப் பெற்றார்.
சிறுவனாக இருந்த போது இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும், பின்னர் வ. ஆ. இராசையாவின் நிகழ்ச்சித் தயாரிப்பில், இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் வானொலி நிலையக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டார். இளைஞர் மன்றத்திற்கும், கல்விச் சேவை நிகழ்ச்சிக்குமான நாடகம், மற்றும் உரைச்சித்திரம், தயாரிக்கவும் குரல் கொடுக்கவும் வாய்ப்புகள் வந்தன. பதினெட்டு வயதிலேயே வானொலி அறிவிப்பாளராக இவர் நியமனம் பெற்றார். இவருடன் எஸ். நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ, இருதய ஆனந்தராஜ், ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரும் தெரிவாகினர். செய்தி வாசிப்பாளராக, நேர்முக வர்ணணையாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நாடக கலைஞராக பல்வேறு பணிகளிலும் காலூன்றினார்.
இவர் தயாரித்த வானொலி நாடகங்கள்
தொகு
சில்லையூர் செல்வராசனின் ‘றோமியோ ஜூலியற்’ கவிதை நாடகம்
எஸ். ராம்தாசின் ‘கோமாளிகள் கும்மாளம்’
கவிஞர் அம்பியின் ‘யாழ்பாடி’ – இந்த நாடகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பவள விழாவின்போது இறுவட்டாக வெளியிடப்பட்டது.
‘ஒரு வீடு கோவிலாகிறது’ – நடிகர்திலகம் சிவாஜி கணேசனால் பாராட்டப் பெற்றது.
தென்னிந்திய கலைஞர்களும் பங்குபற்றிய எம். அஷ்ரப்கானின் ‘ அனிச்ச மலர்கள்’
‘சக்கரங்கள்
கே. எஸ். பாலச்சந்திரனின் ‘கிராமத்துக் கனவுகள்’
“பாட்டுக்கு பாட்டு” முதலான வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளை, வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவர் இவரே. இத்தகைய நிகழ்ச்சிகள், கடல் கடந்து இந்தியாவிலும் வரவேற்பை பெறுகின்றன.
இந்திய தொலைக்காட்சி நிலையங்கள், இவர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.
இலங்கையில் தயாரான கோமாளிகள் திரைப்படத்தில் நடித்த இவர், தென்னிந்திய சினிமாவிலும் நடித்துள்ளார். கே. எஸ். ரவிகுமாரின் “தெனாலி”, மணிரத்தினத்தின் ” கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது. இலங்கையிலும், இந்தியாவிலும் பல மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படப்பாடல்களையும் எழுதியுள்ளார்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இருந்த காலத்திலேயே, ஏராளமான நிகழ்ச்சிகளை, வர்த்தகசேவையிலும், தேசியசேவையிலும், தயாரித்து வழங்கியிருக்கிறார். இவர் தயாரித்த நாடகங்கள் இரண்டு சேவைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
பன்னாட்டுப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளரும், வானொலி, மேடை நாடக, மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக பணியாற்றியவர். அமீட் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளுக்கும், இந்தியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றார்.
இலங்கையின் முன்னணி தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியின் 28ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சக்தி கலையகத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற ஆண்டு நிறைவு விழாவில், உலகப் புகழ்பெற்ற தமிழ் அறிவிப்பாளர் பி. ஹெச். அப்துல் ஹமீது வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
தமிழ் ஒலிபரப்புத் துறையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது குரலாலும் கலைத்திறனாலும் முத்திரை பதித்துவரும் அப்துல் ஹமீதின் மகத்தான ஊடகப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
1967ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகத் தனது பணியைத் தொடங்கிய பி. ஹெச். அப்துல் ஹமீது, செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நேர்முக வர்ணனையாளர், வானொலி நாடகக் கலைஞர் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்.
தனித்துவமான குரல் வளம், தெளிவான தமிழ் உச்சரிப்பு, மொழியாளுமை, சிறந்த நினைவாற்றல், நேயர்களைக் கவரும் நிகழ்ச்சித் தொகுப்பு ஆகியவற்றால் இலங்கை மட்டுமன்றி இந்தியா உள்ளிட்ட உலகத் தமிழர்களின் மனங்களிலும் நீங்காத இடம்பிடித்தவர்.
வானொலி நிகழ்ச்சிகளின் வடிவமைப்பிலும் தயாரிப்பிலும் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவர் தயாரித்து வழங்கிய வானொலி நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
1994ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய அவர், தமிழ் மக்களிடையே சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.
அறிவிப்பாளராக மட்டுமன்றி, நாடகக் கலைஞர், நடிகர், பாடலாசிரியர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கலைஞராகவும் அப்துல் ஹமீது விளங்குகிறார்.
கமல்ஹாசன் நடித்த தெனாலி திரைப்படத்துடன் தொடர்புடைய கலைப் பங்களிப்புகளையும், மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திற்கான பாடல் பங்களிப்பையும் வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கலைஞர்களுடனும் அவர் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார்.
அவரது நீண்டகால ஊடகப் பணிகளுக்காக இருமுறை சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு இலங்கை கலாசார அமைச்சின் ‘பிரதிபா அபிமான’ விருதையும், 2017ஆம் ஆண்டு ‘Sri Lankan of the Year’ விருதையும் பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் ‘Voice of the Century’ விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மேலும், தனது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான ஊடக அனுபவங்களையும் இலங்கை வானொலியின் வரலாற்றையும் பதிவு செய்யும் வகையில் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
தமிழ் ஒலிபரப்புத் துறையின் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள பி. ஹெச். அப்துல் ஹமீதுக்கு சக்தி தொலைக்காட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருது, அவரது நீண்டகால ஊடகப் பணிகளுக்குக் கிடைத்த மற்றுமொரு முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
தலைமுறைகள் கடந்து தமிழ் மக்களுடன் தனது குரலால் உறவாடிவரும் இந்த மூத்த ஊடக ஆளுமையைக் கௌரவித்தமை, தமிழ் கலை மற்றும் ஊடகத்துறைக்கு மதிப்பளிக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற அறிவிப்பாளர், எங்கள் முன்னோடி, தமிழ் ஊடகத்துறையின் தனிப்பெரும் ஆளுமை பி. ஹெச். அப்துல் ஹமீது அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.
தனது தனித்துவமான குரலாலும், தமிழ் மொழியாற்றலாலும், அர்ப்பணிப்புமிக்க ஊடகப் பணியாலும் உலகத் தமிழர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த தங்களின் சாதனைப் பயணம் என்றும் எங்களுக்கு முன்னுதாரணம்.
உலகப் புகழ்பெற்ற அறிவிப்பாளர் பி. ஹெச். அப்துல் ஹமீதுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றமைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. ஏம். காதர் மொகிதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என். எம். ஆமீன், மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது தமிழகத்தில் பல்வேறு முன்னனி தலைவர்கள் உள்ளிட்டோர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
