உள்நாடு

தெதுரு ஓயா பெருக்கெடுப்பு விநாடிக்கு 16,500 கன அடி நீர் வெளியேற்றம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து பேராபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களம் உடனடி அவசர வெள்ள அபாய எச்சரிக்கையை (அறிவித்தல் இலக்கம் 01) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

தெதுரு ஓயா ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இடைவிடாது கொட்டித்தீர்த்து வரும் கனமழையே இந்த உடனடி நெருக்கடிக்குக் காரணமாகும். இதனால் ஆற்றின் நீர்மட்டம் மிக வேகமாக உச்சக்கட்ட வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதோடு, அணையைப் பாதுகாக்கும் நோக்கில் மேலதிக நீர் வெளியேற்றும் மதகுகள் உடனடியாக திறக்கப்பட்டுள்ளன.

தற்போது விநாடிக்கு சுமார் 16,500 கன அடி என்ற அதிவேகப் பாய்ச்சலில் நீர் ஆற்றுக்குள் பாய்ந்தோட விடப்பட்டு வருகிறது. நீர்த்தேக்கத்திற்குள் வந்து சேரும் வெள்ள நீரின் தீவிரத்தைப் பொறுத்து, வரும் மணித்தியாலங்களில் இந்த நீர் வெளியேற்றத்தின் வேகம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொறியியலாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்

இதன் விளைவாக, வாரியபொல, நிகவரெட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய 9 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் தாழ்நிலப் பகுதிகள் எந்த நேரத்திலும் வெள்ளத்தில் மூழ்கும் கடுமையான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்த எச்சரிக்கை 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி காலை 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

குறித்த ஆற்றுப் படுகையை அண்டிய கிராமங்களில் வசிப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும், இப்பகுதியினூடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து உச்சக்கட்ட விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் களமிறங்கி தேவையான அனைத்து அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *