சர்வதேச காந்திய இலக்கிய மாநாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் முக்கிய உரை
இலங்கையின் போருக்குப் பின்னரான சூழலில் அரசுக்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், நிலையான சமாதானத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கும் மகாத்மா காந்தியின் அரசியல் மற்றும் சமூகச் சிந்தனைகள் முக்கிய வழிகாட்டியாக அமைய முடியும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது உலகளாவிய காந்திய இலக்கிய மாநாட்டில் சர்வதேச முக்கிய உரையாளராகப் பங்கேற்ற அவர், “போருக்குப் பின்னரான இலங்கையில் அரசுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதில் காந்திய சிந்தனைகளின் பயன்பாடு” (The Application of Gandhian Thought in Resolving State-Minority Conflicts in Post-Civil War Sri Lanka) என்ற தலைப்பிலான தனது முழுமையான ஆய்வுக் கட்டுரையை மாநாட்டில் வாய்மொழியாகச் சமர்ப்பித்து விரிவான முக்கிய உரையை ஆற்றினார்.
மகாத்மா காந்தி மிஷன் மற்றும் மகாராஷ்டிரா காந்தி ஸ்மாரக் நிதி ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இம்மாநாடு, 2026 ஒக்டோபர் 08 மற்றும் 09ஆம் திகதிகளில் இந்தியாவின் கலாநிதி குமார் சப்தர்ஷி சாஹித்யநகரி, எம்.ஜி.எம். பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காந்தியச் சிந்தனையில் ஆர்வமுடைய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில், பேராசிரியர் எம்.எம். பாஸில் தனது ஆய்வின் முழுமையான உள்ளடக்கத்தையும் ஆய்வு முடிவுகளையும் பரிந்துரைகளையும் வாய்மொழியாக முன்வைத்தார். அவரது உரையைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடாடும் கலந்துரையாடல் அமர்விலும் அவர் பங்கேற்றார்.
பேராசிரியர் எம்.எம். பாஸில் தனது ஆய்வில், இலங்கையில் 2009ஆம் ஆண்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்தபோதிலும், அதற்குக் காரணமாக அமைந்த பல அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துரைத்தார்.
மொழி உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம், அதிகாரப் பகிர்வு, காணி உரிமைகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் இன, மதச் சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் இலங்கையின் போருக்குப் பிந்தைய சமாதானச் செயல்முறையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்த பின்னர் நேரடி ஆயுத வன்முறை குறைந்திருந்தாலும், சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் காணப்படும் சமத்துவமின்மைகள், சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான கவலைகள், அரசியல் தீர்வுக்கான நீண்டகாலக் கோரிக்கைகள் ஆகியவை நிலையான சமாதானத்தை உருவாக்குவதில் தொடர்ந்தும் சவால்களாக உள்ளன என அவர் விளக்கியுள்ளார்.
இராணுவ வெற்றியின் மூலம் உருவாகும் அமைதி மட்டுமே நீடித்த சமாதானத்திற்குப் போதுமானதல்ல. மாறாக, சமூக நீதி, சமத்துவம், அரசியல் பங்கேற்பு, மனித உரிமைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சமாதானக் கட்டமைப்பொன்று அவசியம் என்பதே ஆய்வின் பிரதான வாதமாகும்.
இதன் அடிப்படையில், இலங்கை இராணுவ வெற்றியை மையமாகக் கொண்ட அமைதியிலிருந்து அனைத்து மக்களுக்கும் நீதி, உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்தும் நேர்மறையான சமாதானத்தை நோக்கி நகர வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் அரசியல் தத்துவத்திலிருந்து அகிம்சை, சத்தியாக்கிரகம், சுயராஜ்யம் சர்வோதயம் ஆகிய நான்கு முக்கியக் கருத்துகளை ஆய்வின் கோட்பாட்டு அடித்தளமாகக் கொண்டு, அவற்றை இலங்கையின் போருக்குப் பிந்தைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பேராசிரியர் ஆராய்ந்துள்ளார்.
அகிம்சை என்பது உடல் ரீதியான வன்முறையைத் தவிர்ப்பதுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுவதில்லை. வெறுப்பு, அவமதிப்பு, அச்சுறுத்தல், பாகுபாடு மற்றும் மக்களைச் சமூக ரீதியாக ஒதுக்கிவைக்கும் செயற்பாடுகளையும் தவிர்ப்பதை உள்ளடக்கிய விரிவான அறநெறியாகும்.
இந்தக் கொள்கையின் அடிப்படையில், அனைத்து இன மற்றும் மதச் சமூகங்களினதும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், இனவாதம், மதவாதத் தீவிரப்படுத்தல், வெறுப்புப் பேச்சு மற்றும் சமூகங்களுக்கிடையிலான பகைமையை வளர்க்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வு வலியுறுத்துகிறது.
மேலும், பரஸ்பர மரியாதை, கருணை, சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயத்தை வளர்ப்பதன் மூலம் நீண்டகால நல்லிணக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சத்தியாக்கிரகம் என்பது உண்மையின் மீது உறுதியாக நின்று, வன்முறையற்ற வழிமுறைகளின் மூலம் நீதியையும் உரிமைகளையும் கோருவதாகும். எதிர்த்தரப்பினரைத் தோற்கடிப்பதைவிட, அவர்களது மனச்சாட்சியைத் தூண்டி புரிந்துணர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
இலங்கையில் இன மற்றும் மதச் சமூகங்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக அடிமட்ட மக்களை மையமாகக் கொண்ட கலந்துரையாடல் மேடைகள், உண்மையை வெளிக்கொணரும் செயற்பாடுகள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான நேரடித் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சிகள் அவசியம் என ஆய்வு முன்மொழிகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகங்களின் அனுபவங்களையும் துயரங்களையும் புரிந்துகொண்டு, அவற்றை மதிப்பதன் மூலம் பரஸ்பர நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்பதும் ஆய்வின் முக்கியக் கருத்தாகும்.
அத்துடன், அமைதியான மக்கள் போராட்டங்களை ஜனநாயக உரிமையாக மதித்தல், பொதுமக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்த்தல் மற்றும் முரண்பாடுகளை ஒடுக்குமுறையின் மூலம் கையாள்வதற்குப் பதிலாக உரையாடல் வழியாகத் தீர்ப்பதற்கான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
காந்தியின் சுயராஜ்யக் கருத்து தனிமனித சுயக்கட்டுப்பாட்டை மட்டுமன்றி, மக்களின் தேவைகளுக்கு நெருக்கமான மட்டங்களில் அதிகாரமும் தீர்மானிக்கும் உரிமையும் நிலைநிறுத்தப்பட வேண்டியதையும் வலியுறுத்துகிறது.
இந்தச் சிந்தனையை இலங்கையின் அரசியல் கட்டமைப்புடன் தொடர்புபடுத்தியுள்ள பேராசிரியர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதன் மூலம் மக்களின் பங்கேற்புடன் கூடிய ஜனநாயக நிர்வாகத்தை மேம்படுத்த முடியும் என விளக்கியுள்ளார்.
மாகாண சபைகளின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேவையான நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை வழங்குதல், கிராம மட்டத்தில் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் தீர்மானம் எடுக்கும் செயல்முறைகளில் உள்ளூர் சமூகங்களைப் பங்கேற்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக மாற்ற உதவும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அதிகாரப் பகிர்வை ஒரு குறிப்பிட்ட இனச் சமூகத்திற்கான அரசியல் சலுகையாகப் பார்க்காமல், அனைத்து மக்களுக்கும் ஜனநாயகப் பங்கேற்பையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தும் நிர்வாகச் சீர்திருத்தமாக அணுக வேண்டும் என்பதும் ஆய்வின் முக்கிய முன்மொழிவாகும்.
சர்வோதயம் என்பது சமூகத்தின் மிகவும் பின்தங்கிய மக்களையும் உள்ளடக்கிய அனைவரினதும் நலனை உறுதிப்படுத்துவதாகும். அபிவிருத்தியின் பயன்கள் வசதிபடைத்த பிரிவினரிடம் மட்டும் குவியாமல், வறுமை மற்றும் புறக்கணிப்புக்கு உள்ளாகும் மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இக்கொள்கையின் மையக் கருத்தாகும்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், காணியற்ற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஆய்வு வலியுறுத்துகிறது.
கிராம மட்டக் கூட்டுறவு முயற்சிகள், சமூகங்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், வாழ்வாதார மேம்பாடு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவு ஆகியவற்றின் மூலம் பொருளாதார நீதியையும் சமூக நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைத்துச் செயற்படுத்த முடியும் எனப் பேராசிரியர் முன்வைத்துள்ளார்.
மேலும், அபிவிருத்தித் திட்டங்கள் மத்திய அரசின் தீர்மானங்களின் அடிப்படையில் மட்டும் முன்னெடுக்கப்படாமல், உள்ளூர் மக்களின் உண்மையான தேவைகளையும் முன்னுரிமைகளையும் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட வேண்டும் என்பதும் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாய்வின் முக்கியத்துவம், போர் முடிவடைந்த பின்னர் அமைதியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அந்த அமைதி அனைத்து சமூகங்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்துகிறதா என்பதையும் ஆராய்வதில் தங்கியுள்ளது.
பேராசிரியர் முன்வைக்கும் ஆய்வுக் கட்டமைப்பின்படி, சுயராஜ்யம் அரசியல் அதிகாரப் பகிர்வையும் பரவலாக்கப்பட்ட தீர்மானமெடுக்கும் முறையையும் வலுப்படுத்துகிறது. சர்வோதயம் பொருளாதார வாய்ப்புகளைப் பகிர்ந்தளித்து பின்தங்கிய மக்களின் நலனை முன்னிலைப்படுத்துகிறது. சத்தியாக்கிரகம் முரண்பாடுகளை உரையாடல் மற்றும் இணக்கப்பாட்டை நோக்கி மாற்றுகிறது. அகிம்சை இம்மாற்றங்கள் அனைத்திற்குமான அறநெறி அடித்தளத்தை வழங்குகிறது.
இந்த நான்கு சிந்தனைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படும்போது, சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை வலுப்படுத்தவும், அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்தவும், புறக்கணிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் முடியும் என ஆய்வு விளக்குகிறது.
சமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறை மேலிருந்து கீழ்நோக்கிச் செயற்படுத்தப்படும் அரச கொள்கைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், கிராமங்கள், சமூக அமைப்புகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் மாகாண நிர்வாகங்கள் ஊடாக அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கி வளர்ச்சியடைய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காந்தியச் சிந்தனைகள் இலங்கைக்குப் புறம்பான அல்லது முற்றிலும் புதிய கருத்துகள் அல்ல என்பதையும் பேராசிரியர் தனது ஆய்வில் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டங்கள், சர்வோதய சிரமதான இயக்கத்தின் கிராமிய அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு சமூகங்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற மக்கள் இயக்கங்கள் ஆகியவை காந்தியக் கொள்கைகளின் உள்ளூர் பொருத்தத்தைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய அனுபவங்களாகக் கருதப்படுகின்றன.
குறிப்பாக, சத்தியாக்கிரகத்தின் மூலம் அரசியல் உரிமைகளைக் கோரிய வரலாற்று முயற்சிகளும், கிராமிய மக்களின் பங்கேற்புடன் அபிவிருத்தி மற்றும் சமூக ஒத்துழைப்பை முன்னெடுத்த சர்வோதய இயக்கத்தின் அனுபவங்களும், காந்தியச் சிந்தனைகளை இலங்கையின் சூழலுடன் இணைத்துப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைகளை வழங்குகின்றன.
இவ்வாறான வரலாற்று மற்றும் சமகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு ஏற்ற வகையில் காந்தியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு ஆராய்கிறது.
அதேவேளை, அதிகாரப் பகிர்வுக்கு எதிரான அரசியல் எதிர்ப்புகள், கடந்தகால அகிம்சைப் போராட்டங்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகள், உள்ளூர் அதிகாரக் கட்டமைப்புகளில் காணப்படக்கூடிய சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பொருளாதார வளங்களின் பற்றாக்குறை போன்ற தடைகளையும் ஆய்வு கவனத்தில் எடுத்துள்ளது.
எனவே, காந்தியச் சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவது வெறுமனே தத்துவார்த்த முன்மொழிவாக அமையாமல், உள்ளூர் சமூகங்களின் அனுபவங்களையும் அரசியல் யதார்த்தங்களையும் கருத்தில் கொண்ட விமர்சனபூர்வமான அணுகுமுறையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவது உலகளாவிய காந்திய இலக்கிய மாநாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் சர்வதேச முக்கிய உரையாளராகப் பங்கேற்று, தனது முழுமையான ஆய்வுக் கட்டுரையை வாய்மொழியாகச் சமர்ப்பித்தமை, இலங்கையின் இன நல்லிணக்கம், அரசியல் அதிகாரப் பகிர்வு, சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நிலையான சமாதானம் தொடர்பான கல்விசார் விவாதங்களில் பல்கலைக்கழக ஆய்வுகளின் பங்களிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
உலகளாவிய கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்ற மாநாட்டில், இலங்கையின் போருக்குப் பிந்தைய அனுபவங்களை காந்திய அரசியல் தத்துவத்துடன் இணைத்து ஆராயும் ஆய்வை முழுமையாக முன்வைத்ததன் மூலம், உள்ளூர் பிரச்சினைகளை சர்வதேச கல்விசார் விவாதங்களுடன் தொடர்புபடுத்துவதற்கான வாய்ப்பையும் அவர் உருவாக்கியுள்ளார்.
கல்வி நிறுவனங்களின் பணி கற்பித்தல் மற்றும் பட்டங்களை வழங்குதல் என்பவற்றுடன் முடிவடையாமல், சமூகத்தில் நிலவும் சிக்கல்களை ஆய்வின் மூலம் புரிந்துகொண்டு, அவற்றுக்கான மாற்று அணுகுமுறைகளை முன்வைப்பதிலும் விரிவடைகிறது. அந்த வகையில், இன முரண்பாடுகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான இவ்வாய்வு, சமூக விஞ்ஞானம், அரசியல் சிந்தனை மற்றும் சமாதான ஆய்வுத் துறைகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமைகிறது.
மாநாட்டில் முழுமையான முக்கிய உரையை வழங்கியதுடன், பங்கேற்பாளர்களுடனான ஊடாடும் கலந்துரையாடலிலும் பேராசிரியர் எம்.எம். பாஸில் ஈடுபட்டார். இதன் மூலம் தனது ஆய்வுக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், பல்வேறு சர்வதேசப் பார்வைகளுடன் உரையாடுவதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இலங்கை ஒரு நிலையான சமாதானச் சமூகமாக மாற்றமடைவதற்கு அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக நடைமுறைப்படுத்துதல், உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குதல், அனைத்து சமூகங்களின் துயரங்களையும் அங்கீகரிக்கும் உண்மைத் தேடல் மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகளை முன்னெடுத்தல் ஆகியவை அவசியம் என ஆய்வு பரிந்துரைக்கிறது.
அத்துடன், அமைதியான மக்கள் போராட்டங்களை ஜனநாயக உரிமையாக மதித்தல், இன மற்றும் மத வெறுப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை நல்லிணக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல், அபிவிருத்தித் திட்டங்களை உள்ளூர் மக்களின் தேவைகளின் அடிப்படையில் திட்டமிடுதல் போன்ற நடவடிக்கைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
மாகாண சபைத் தேர்தல்களை உரிய முறையில் நடத்துதல், அரசியலமைப்பில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை அர்த்தமுள்ளதாக நடைமுறைப்படுத்துதல், உள்ளூர் அரச நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல் போன்ற நிர்வாகச் சீர்திருத்தங்களும் ஆய்வின் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தும் அரசாங்கத்தின் பொறுப்பாக மட்டும் கருதப்படாமல், பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பங்களிக்க வேண்டிய நீண்டகாலச் செயற்பாடுகளாக அமைய வேண்டும் என்பதே ஆய்வின் பரந்த நோக்கமாகும்.
இரண்டாவது உலகளாவிய காந்திய இலக்கிய மாநாட்டில் பேராசிரியர் எம்.எம். பாஸில் முன்வைத்த ஆய்வின் மையச் செய்தி, போர் முடிவடைந்த பின்னர் உருவாகும் அமைதியை உண்மையான சமாதானமாக மாற்றுவதற்கு அரசியல் அதிகாரப் பகிர்வு, சமூக நீதி, பொருளாதார சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள் அவசியம் என்பதாகும்.
மகாத்மா காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம், சுயராஜ்யம் மற்றும் சர்வோதயம் ஆகிய சிந்தனைகளை இலங்கையின் தற்போதைய சூழலுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்துள்ள இவ்வாய்வு, பல்வேறு இன மற்றும் மதச் சமூகங்கள் இணைந்து வாழும் சமூகங்களில் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், அடிமட்ட மக்களின் பங்கேற்புடன் நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கும் மாற்று வழிமுறைகளை முன்வைக்கிறது.
இலங்கையின் அனுபவங்களை சர்வதேசக் கல்விசார் அரங்கில் முழுமையான ஆய்வுரையாக முன்வைத்துள்ள இப்பங்களிப்பு, இன நல்லிணக்கம், ஜனநாயக நிர்வாகம், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சமூக மாற்றம் குறித்த ஆழமான விவாதங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
போருக்குப் பின்னரான சமூகத்தில் நீடித்த சமாதானம் என்பது வன்முறை இல்லாத நிலையை மட்டும் குறிக்காது; அனைத்து மக்களும் சம உரிமைகள், அரசியல் பங்கேற்பு, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கையைப் பெறும் சூழலை உருவாக்குவதையும் உள்ளடக்கியது என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகிறது.
சமாதானம் என்பது போர் முடிவடைந்த நிலை மட்டுமல்ல; நீதி, சமத்துவம், மனிதநேயம் மற்றும் அனைவரினதும் நலன் உறுதிப்படுத்தப்படும் சமூகத்தை உருவாக்கும் தொடர்ச்சியான செயல்முறையாகும் என்ற காந்தியச் சிந்தனையின் சமகாலப் பொருத்தத்தைப் பேராசிரியர் எம்.எம். பாஸிலின் இந்த ஆய்வு மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
(நூருல் ஹுதா உமர், எம்.வை. அமீர்)
