உலகம்

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு சவூதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசா சார்பில் தயாரிக்கப்பட்ட மேன் முறையீடு, அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவின் கூட்டு முயற்சியினால் இந்த மேன் முறையீடு (11) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன் முறையீட்டைத் தயாரிப்பதற்காக, இலங்கையின் விசேட சட்டத்தரணிகள் குழுவுக்கும் சவூதி அரேபிய சட்டத்தரணிகளுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத்தின் ஒருங்கிணைப்பில், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளத்தில் முஹம்மது நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான பதிவொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, கீழ் நீதிமன்றமொன்று அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. எனினும், பின்னர் இந்தத் தீர்ப்பை மாற்றியமைத்த மேன் முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது.

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இலங்கை சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும, மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவவி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதியான நீதிபதி எம்.டி. மொஹமட், சட்டத்தரணி ஃபாரிஸ் ஃபஸால் அப்துல் ஹஃபீல் மொஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மொஹமட் ரியாஸ்தீன் சில்மி ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *