உள்நாடு

புத்தளத்தில் முதன் முறையாக ஹாபிழ்கள் மற்றும் ஆலிம்களுக்கான தஜ்வீத் கற்கை நெறி பட்டமளிப்பு விழா.

புத்தளம் நகர வரலாற்றில் முதன் முறையாக, அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற ஹாபிழ்கள் மற்றும் ஆலிம்களுக்கான சிறப்புத் தஜ்வீத் கற்கை நெறியின் பட்டமளிப்பு விழா அண்மையில் (10) புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக்கலா பீடத்தின் கேட்போர் கூடத்தில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.

புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக் கலாபீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வானது இஸ்லாமியக் கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்திருந்தது.

இஹ்யாவுல் உலூம் அரபுக் கலா பீடத்தின் அதிபர், ஆசிரியர்கள், பரிபாலன சபையினர் இணைந்து இந்நிகழ்வுதனை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளனர்.

கல்லூரி முதல்வர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம். சனூஸ் ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பல்வேறு அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும் பட்டம் பெறும் உலமாக்களின் குடும்பத்தினரும் பெருந்திரளாக வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர்.

புத்தளம் மண்ணில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட இக்கல்வித் திட்டம், குர்ஆன் ஓதுதலில் தஜ்வீத் முறையான தேர்ச்சி பெற விரும்பும் ஆலிம்கள் மற்றும் ஹாபிழ்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.

விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய கல்லூரி முதல்வர், குர்ஆன் கலையின் முக்கியத்துவத்தையும், அதனைத் தூய்மையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

இந்த அறிவுப் பயணம் இத்துடன் நிறைவடையவில்லை. இதன் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், இச்சிறப்புத் தஜ்வீத் கற்கை நெறியின் தொடர்ச்சியாக, புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான பதிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *