உள்நாடு

“ஹரீஸின் குரலை நசுக்க முடியாது; சமூக நீதிக்கான போராட்டம் தொடரும்” : கல்முனையில் சமூக செயற்பாட்டாளர்கள் அதிரடி குரல் – ஆறு பேருக்கும் நியாயமான தீர்வு கோரிக்கை

கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதிய உதவியாளர்களின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் ஆறு பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதி கோரி, கல்முனையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூட்டாகக் குரல் எழுப்பியுள்ளனர்.

“எமக்கான சமூக நீதி எழட்டும்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (04) கல்முனை மயோன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், ஏ.ஆர். அமீர், ஏ. கலீலுர்ரஹ்மான், யூ.எல். தௌபீக், எம்.எம். முஸ்தபா, பி.டி. ஜமால் உள்ளிட்ட முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், சட்டத்தரணிகள் மற்றும் கல்முனை பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தவர்கள், முஸ்லிம் சமூகத்துக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்பும் சமூக செயற்பாட்டாளர்களின் குரல் சட்ட நடவடிக்கைகள் மூலம் நசுக்கப்படக் கூடாது என வலியுறுத்தினர்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் தாதிய உதவியாளர்களின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை ஒரு நிர்வாக விடயமாக மாத்திரம் பார்க்கப்படக் கூடாது என்றும், அது முஸ்லிம் பெண்களின் கலாசார மற்றும் வாழ்வியல் அடையாளங்களுடன் தொடர்புடைய விடயமாகவும் அணுகப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன், அரசின் முக்கிய அமைச்சரொருவரைச் சந்தித்து தற்காலிகத் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமூகப் பிரச்சினைகள் எழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து புத்திஜீவிகள், இளைஞர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் முன்வந்து சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதிநிதிகள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில் பல்வேறு அரசியல் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர். ஹரீஸ் தற்போது எந்த அரசியல் நிலைப்பாட்டில் இருந்தாலும், அவர் கல்முனை மற்றும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுத்த காலப்பகுதியை தனிப்பட்ட அரசியல் போட்டிகளின் அடிப்படையில் மாத்திரம் மதிப்பிட முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஹரீஸ் அரசியல் அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் கல்முனை மக்களுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இழைக்கப்படும் அநீதியாக தாம் கருதுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் தொடர்பில் பொதுவெளியில் கருத்துத் தெரிவித்தவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் அரசியல்வாதிகளால் மட்டுமே கையாளப்பட வேண்டியதல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இரு சமூகங்களையும் சேர்ந்த சிவில் அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த விடயங்களுக்கு சட்ட ரீதியானதும் ஜனநாயக ரீதியானதுமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை, சிவராசா அனோஜன் விவகாரம் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் ஆகிய இரு பிரச்சினைகளும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்ற கருத்துக்கள் சமூகத்தில் நிலவி வருவதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, அரசியல்வாதிகளை ஒரு புறம் வைத்து, இரு சமூகங்களையும் சேர்ந்த சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசியல் சூழல் பெரிதும் மாறியுள்ளதாகவும், இளைஞர்கள் இந்த மாற்றங்களையும் நுண்ணரசியல் நகர்வுகளையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சமூக உரிமைகள் தொடர்பில் செயற்படும் முற்போக்கு சக்திகள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் இதுவெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

முஸ்லிம் மக்களின் அரசியல் வரலாற்றில் கல்முனைக்கு முக்கிய இடம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கங்களின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் கவலை வெளியிட்டனர்.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் பங்கேற்பதற்கும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கும் அப்பால், சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளில் வலுவான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

கல்முனை தொடர்பான சட்டப் போராட்டங்களுக்கும் முஸ்லிம் தரப்பில் உரிய ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும், பிராந்திய அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகள் மற்றும் தனவந்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் நஸீர், மீனவர் சமூகத்தின் சார்பில் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் தொடர்ச்சியாக உருவாகி வருவதாகக் குறிப்பிட்டார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதிய உதவியாளர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையிலும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மட்டுமன்றி அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் களத்தில் நின்று செயற்பட்டதாக நஸீர் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில், கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரத்திலும் சமூகத்தின் சார்பில் ஹரீஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலை தாதிய உதவியாளர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் ஆறு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தாம் அறிந்திருப்பதாகவும், அவர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் நஸீர் வலியுறுத்தினார்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூகத்தின் சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்ட பிரமுகர்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சமூகப் பிரச்சினைகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முன்வந்து உதவ வேண்டும் என்றும் அவர் மீனவர் சமூகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற பல்வேறு தரப்பினரும், தனிப்பட்ட அரசியல் வேறுபாடுகளை விட சமூக உரிமைகளும் நீதியும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் ஒரு தனிப்பட்ட நிர்வாகப் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படாமல், அதனுடன் தொடர்புடைய கலாசார உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் போன்ற பரந்த விடயங்களின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

சமூகப் பிரச்சினைகளில் கருத்துத் தெரிவிக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகுமானால், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவதற்கும், உண்மையான பிரச்சினைகளை சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் முன்வைப்பதற்கும் சிவில் அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், கலாசார அடையாளம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஊடகவியலாளர் சந்திப்பின் பிரதான வலியுறுத்தலாக அமைந்தது.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் தொடர்பில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றதாகத் தெரிவிக்கப்படும் ஆறு பேருக்கும் உரிய சட்டப் பாதுகாப்பும் நியாயமான அணுகுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்றும் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கல்முனை மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூக, கலாசார மற்றும் வாழ்வியல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்புகள், இளைஞர்கள், வர்த்தகர்கள், மீனவர் அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இதுவெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

“சமூக நீதிக்கான குரல்கள் நசுக்கப்படாமல், நியாயத்திற்கான குரல்கள் மேலும் வலுப்பெற வேண்டும்” என்பதே கல்முனையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பிரதான செய்தியாக அமைந்தது.

எம்.வை.அமீர், நூருல் ஹுதா உமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *