பிரதமரின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி
நாட்டின் சிறுவர்களுக்கு வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு, புரிந்துணர்வு மற்றும் தன்னம்பிக்கையையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சிறுவர் தினம் வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக, ஒக்டோபர் 1 ஆம் திகதி இலங்கையில் ஒரு சிறப்புமிக்க தினமாக இருந்து வருகின்றது.
இத்தினத்தில் நாம் எமது சிறுவர்களைக் கொண்டாடுவதுடன், எமது முதியோரையும் கௌரவிக்கின்றோம். எமது சமூகத்தை வடிவமைத்த தலைமுறைகளுக்கும், அதேபோன்று அதன் எதிர்காலத்தை வடிவமைக்கவுள்ள தலைமுறைக்குமான எமது பொறுப்பை இத்தினம் எமக்கு நினைவூட்டுகின்றது.
இந்த ஆண்டு, “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடுகின்றோம்.
துரிதமான சமூக மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் சிறுபராயமே மாற்றமடைந்து வரும் இக்காலகட்டத்தில், இத்தொனிப்பொருள் குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை ஒரு பிள்ளையின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவைகளாக உள்ளன. எனினும், வளமான சிறுபராயத்திற்கு உணர்வுப் பாதுகாப்பு, தன்னம்பிக்கை, கண்ணியம் மற்றும் அச்சம், வன்முறை, அவமதிப்பு அல்லது பாகுபாடு இன்றி வளர்வதற்கான சுதந்திரம் ஆகியவையும் அவசியமாகும்.
பாதுகாப்பாகவும், மதிப்புடன் நடத்தப்படுவதாகவும், தமது கருத்துகள் செவியேற்கப்படுவதாகவும் உணரும் ஒரு பிள்ளை, கற்றுக்கொள்வதற்கும், உறவுகளை உருவாக்குவதற்கும், சவால்களை எதிர்கொள்வதற்கும், சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்கும் சிறந்த நிலையில் இருக்கும்.
சிறுவர்கள் கற்றுக்கொள்ளும், தொடர்புகொள்ளும் மற்றும் உலகை அனுபவிக்கும் முறைகளை டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் மாற்றியமைத்து வரும் நிலையில், இது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
தொழில்நுட்பம் அளப்பரிய வாய்ப்புகளை வழங்குகின்ற அதேவேளை, இணையவழித் துன்புறுத்தல், தொந்தரவு, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் சுரண்டல் உள்ளிட்ட புதிய வகையான அழுத்தங்களுக்கும் பாதிப்புகளுக்கும் சிறுவர்களை அது உட்படுத்துகின்றது. எனவே, இச்சூழலில் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு அவர்களின் உளநலம் மற்றும் சமூக உளவியல்சார் நல்வாழ்விலும் சமமான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அரசாங்கம் இந்தப் பொறுப்பை அங்கீகரித்துள்ளதுடன், இணையவழியிலும் இணையத்திற்கு வெளியிலும் சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சிறுவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான பொருத்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் சர்வதேச அனுபவங்களைக் கருத்திற்கொண்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, கல்வி, படைப்பாற்றல் மற்றும் வளர்ச்சிக்காக சிறுவர்கள் தொழில்நுட்பத்தின் நன்மைகளைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்படுகின்றது. பல நாடுகளும் இதேபோன்று டிஜிட்டல் சூழல்களில் சிறுவர்களுக்கான வயதுக்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை வலுப்படுத்தி வருகின்றன.
எவ்வாறாயினும், எமது பொறுப்பு டிஜிட்டல் வெளிக்கு அப்பாலும் விரிவடைகின்றது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறை உடல் ரீதியான காயங்களை மாத்திரம் ஏற்படுத்துவதில்லை. கொடுமைப்படுத்தல், தொந்தரவு, அவமதிப்பு மற்றும் வன்முறையான ஒழுக்காற்று முறைகள் ஆகியவை சிறுவரின் தன்னம்பிக்கை, உணர்வுசார் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
சிறுவர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் ஒழுக்காற்று அணுகுமுறைகளை ஊக்குவிப்பதுடன், உடல் ரீதியான தண்டனைக்கு எதிரான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளிலும் இந்தப் புரிதல் பிரதிபலிக்கின்றது. இத்துறையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், சிறுவர்களை உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றன.
சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவது சிறுவர்களை பொருளாதாரச் சுரண்டலிலிருந்தும் பாதுகாப்பதைக் குறிக்கின்றது. இந்த ஆண்டு, அரசாங்கம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் சட்டத்தை வலுப்படுத்தி, தொடர்புடைய குற்றங்களுக்கான அபராதத்தை ரூ. 10,000 இலிருந்து ரூ. 100,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்தத் திருத்தம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு, செப்டெம்பர் மாதம் 2026 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.
தற்போதுள்ள சட்டம் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடைசெய்கின்றது. வலுப்படுத்தப்பட்ட தண்டனைகள் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் தொழிலில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான எமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன.
இந்த நடவடிக்கைகள் ஒரு விரிவான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன: இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் ஒவ்வொரு சிறுவரும், அவர்களின் பொருளாதார நிலைமை, புவியியல் அமைவிடம், மொழி, இனத்துவம், மதம், பாலினம், மாற்றுத்திறன் அல்லது வேறு எந்த வேறுபாடுகளையும் பொருட்படுத்தாது, பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், கல்வியறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்வதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், இத்தகைய சூழலை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மாத்திரம் உருவாக்க முடியாது. சிறுவர்கள் அச்சமின்றிப் பேசவும், அவமதிப்புக்கு உள்ளாகாமல் கற்றுக்கொள்ளவும், களங்கப்படுத்தப்படாமல் உதவியை நாடவும், வன்முறையின்றி வளரவும் கூடிய சூழல்களை உருவாக்குவதில் பெற்றோர், ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள், சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் இந்தப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்கின்றன.
இந்த உலக சிறுவர் தினத்தில், எமது சிறுவர்களின் கருத்துகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் முக்கியமானவை என்பதை உணர்ந்து, அவர்களின் கருத்துகளை நாம் மேலும் கவனமாகச் செவிமடுப்போம். அவர்களுக்கு கல்வியையும் வாய்ப்புகளையும் மாத்திரமன்றி, வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு, புரிந்துணர்வு மற்றும் தன்னம்பிக்கையையும் வழங்குவோம்.
எமது சிறுவர்களின் மனங்களை வலுப்படுத்தும்போது, எமது நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்துகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
