உள்நாடு

ஜனாதிபதி அநுர தங்களின் ஆட்சியில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் என பகிரங்கமாக வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கவலை தெரிவிப்பு

கடந்தகால அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது நீதித்துறையினை தவறாக நடாத்தி அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்குவதற்கு நுரைச்சோலையில் 50 ஏக்கர் காணியில் சவூதி அரசினால் 1000 கோடி செலவில் 500 வீடுகள் உருவாக்கப்பட்டு சர்வதேச தரத்திலான சகல அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா நாட்டின் தூதர் அப்துல் ரஹ்மான் அல்-ஜம்மாஸ் அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் கையளித்தார். 17 வருடங்கள் சென்ற நிலையிலும் இதுவரை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகள் பகிர்ந்தளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்போதைய அரசாங்கம் இனவாதங்களை உருவாக்கி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை பகிர்ந்தளிக்காமல் நீதித்துறையை பாவித்த வரலாற்றை நாம் அறிவோம்.

இந்த நிலையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், பொதுத் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தினை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகிர்ந்தளிப்போம் என்று பகிரங்கமாக வாக்குறுதி வழங்கினார். 02 வருடங்கள் சென்ற பின்னும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கு வீடுகள் பரிந்தளிக்கப்படாத நிலைமை தொடர்கிறது.

நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம், பாராளுமன்றத்தில் 159 அதிகாரம் நீதித்துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த சூழலில் நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தினை பகிர்ந்தளிப்புக்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அரசியல் அமைப்புக்கான 22வது திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தம் ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கருத்துத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அண்மையில் கௌரவ வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தினை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினோம். தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி அதிகாரம் அமைந்துள்ள ஆளுங்கட்சியினரும் ஒன்றிணைந்து நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தினை பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நமது மக்கள் இறுதியாக நம்பிச் செல்கின்ற இடமாக நீதித்துறை காணப்படுவதனால், ஓர் அரசின் பிரதான 03 துறைகளுள் நீதித்துறைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இயல்பாகவே எழுகின்றது. ஐக்கிய நாடுகளின் நீதித்துறைச் சுதந்திரம் பற்றிய அடிப்படை கோட்பாடுகளின் முதலாம் உறுப்புரையின் பிரகாரம் “நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அரசு உத்தரவாதமளித்து அரசியல் யாப்பிலோ, நாட்டின் சட்டங்களிலோ அது சேர்க்கப்படுதல் வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதும், அதனை அவதானிக்க வேண்டியதும் ஒவ்வொரு அரசாங்கத்தினதும் மற்றும் நிறுவனத்தினதும் கடமையாகும். எனினும் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து நீதித்துறையினது சுதந்திரம் துரதிஷ்டவசமாக கேள்விக்குட்படுத்தப்படும் நிகழ்வுகள் இடம்பெறுவதினை நாம் கண்டுள்ளோம்

நீதித்துறைச் சுதந்திரத்தில் நீதிபதிகளின் நியமன முறை மிகுந்த ஆதிக்கமுடையதாகும். அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி, சட்டத்துறையில் தேர்ந்த அறிவுடையவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களின் நேர்மை, நாணயம் உடையவர்களை நிர்வாகத்துறை தெரிவு செய்யலாம். எனினும் சுதந்திரமான நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்படுகின்றவர்களை நிருவாகத்துறை தெரிவு செய்வதானது மிகச் சிறப்புக்குரியதாகும்.

கடந்த காலங்களில் நமது நாட்டில் ஆட்சிக்கு வந்த பெரிய கட்சிகள் தங்களுக்கு சார்பான நீதிபதிகளை நியமனம் செய்தனர். தற்போது நீதிபதியாக பதவி வகிப்பவர்களும் கடந்தகால அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்பட்டவர்களே தற்போதைய ஆளும் கட்சியினருக்கு சாதகமான நீதித்துறையாக மாற்ற வேண்டும் எனில் பதவியில் உள்ள நீதிபதிகளினை தங்களுக்கு சார்ந்தவர்களாக மாற்றுவதற்காக அவர்களின் சேவைக்கால வயதெல்லையை நீடிப்பதனால் ஆளும் கட்சியினர் தங்களின் ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு விருப்பமான முறையில் நீதித்துறையை பாவிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகார பகிர்வு தொடர்பில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் மிகவும் தெளிவான ஏற்பாடுகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த அரசியலமைப்பு ஏற்பாடுகள் எந்த வகையிலேனும் மீறப்பட்டால் நாட்டில் அரசியலமைப்பு தொடர்பான நிச்சயமற்ற தன்மை உருவாகக்கூடும்.

அரசாங்கம் நீதியரசர்களின் பதவிக்காலத்தை மேலும் 02 ஆண்டுகளுக்கு நீடித்தால் விரைவில் ஓய்வு பெறவுள்ள நீதியரசர்களுக்கு மேலும் 02 ஆண்டுகள் பதவியில் தொடர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இவ்வாறான நீதியரசர்கள் வழங்கும் தீர்ப்புகள் தொடர்பில் பொதுமக்கள் இடையே சந்தேகங்களும், கேள்விகளும் ஏற்படக்கூடும்

குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் ஊழல் தொடர்பான பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் சுயாதீனமான நீதித்துறை நிலைநிறுத்தப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதன் மூலமும் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதன் மூலமும் மட்டுமே பிரச்சனையை தீர்க்க முடியாது. இதற்கான மாற்றுத் தீர்வுகளாக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நீதிமன்றப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் வழக்குகளை விசாரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேங்கியுள்ள வழக்குகளில் கணிசமான அளவு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளாகும். அவற்றில் பெரும்பாலானவை பாகப்பிரிவினை வழக்குகள் ஆகும் எனவே இவ்வாறான வழக்குகளை விசாரிக்கும் நடைமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கு பொருத்தமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டால் நிலுவையில் உள்ள வழக்குகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

இது தொடர்பான நியாயமான காரணங்களை எல்லாம் முற்றாக புறந்தள்ளிவிட்டு தங்களுக்கு பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பழம் 159 ஐ பயன்படுத்தி சகல சட்டம் மூலங்களையும் நிறைவேற்ற நினைக்கின்றீர்கள். நீதி என்ற விடயத்தில் இறைவனின் நீதி மிக முக்கியமானது என்பதனை ஆளும் கட்சியினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியளிக்கப்பட்டதன் படி ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என நமது நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நீதிபதிகளின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கான இந்த அவசரமான ஏற்பாடுகளை அரசாங்கம் நீதிபதிகளின் பதவிக்காலங்களை நீடிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கும் போது நமது நாட்டின் நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் உணரக்கூடியதாக உள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட (65 வயது) ஓய்வு பெறும் வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், பூட்டான், சிங்கப்பூர் ஆகிய பல ஆசிய நாடுகளில் இந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகின்றது.

நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை வரலாற்று ரீதியில் உற்று நோக்கும் போது இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆட்சியாளர்களுக்கு சார்பாகவே செயற்பட்ட வரலாற்றினை நமது நாட்டில் நாம் கண்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்த்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தங்களின் நிறிவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை வைத்துக் கொண்டு நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை இல்லாமல் செய்தனர். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரதம நீதியரசராக பதவி வகித்த திருமதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வந்து பிரதம நீதியரசர் பதவியில் இருந்து திருமதி ஷிராணி பண்டாரநாயக்கவை தூக்கி எறிந்த வரலாறும் நமது நாட்டில் நடைபெற்றுள்ளது.

நீதித்துறையினை ஜனாதிபதி பதவியில் வகித்த சிலர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வரலாறும் அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகளையும் நாம் பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *