டேரின் இலங்கைக்கு பொதுநலவாய பவர்லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்
கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற 2026 பொதுநலவாய பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை பவர்லிஃப்டிங் அணியின் தலைவர் டேரின் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
செப்டெம்பர் 19 முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியை சர்வதேச பவர்லிஃப்டிங் சம்மேளனம் (IPF) ஏற்பாடு செய்திருந்தது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இலங்கையைச் சேர்ந்த 14 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த போதிலும், விசா பிரச்சினைகள் காரணமாக முன்னணி பவர்லிஃப்டிங் வீரர்கள் சிலருக்கு போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆறு வீரர்களைக் கொண்ட இலங்கை அணி போட்டியில் பங்கேற்றதுடன், அந்த அணிக்கு டேரின் தலைமை தாங்கினார்.
மிகவும் கடுமையான போட்டி நிலவிய எடைப் பிரிவில் பங்கேற்ற டேரின், தனது அனுபவத்தையும் திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தி இலங்கைக்கான வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
இம்முறை போட்டியில் இலங்கை சார்பில் பதக்கங்களை வென்ற ஏனைய வீரர்களாக உவிந்து ஜயசிங்க, சுசித சுரவீர மற்றும் ரஷித டி சில்வா ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இலங்கை பவர்லிஃப்டிங் அணியின் தற்போதைய தலைவரான டேரினின் சர்வதேச விளையாட்டு வாழ்க்கையும் பல்வேறு சாதனைகளால் நிறைந்துள்ளது.
அவர் இதுவரை 13க்கும் மேற்பட்ட சர்வதேச பவர்லிஃப்டிங் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற போட்டியில் ன்Commonwealth Champion, 2024ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற Masters IPF World Champion மற்றும் 2025ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிமேஜியில் நடைபெற்ற போட்டியில் Asian Silver Medallist ஆகிய பெருமைகளையும் பெற்றுள்ளார்.
இம்முறை வென்ற வெண்கலப் பதக்கம், சர்வதேச பவர்லிஃப்டிங் அரங்கில் இலங்கைக்காக டேரின் பெற்றுள்ள மற்றுமொரு முக்கியமான வெற்றியாகப் பதிவாகியுள்ளது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
