Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல் இன்னமும் வெளிவர வேண்டியுள்ளதென வலியுறுத்துகிறார் சுதத்த திலக்கசிறி

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் நௌஃபர் மௌலவிக்கு 16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமானால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 33,000 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என, சமூக செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சுதத்த திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

தற்போதைய வழக்குத் தீர்ப்பின் மூலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 15 பேருக்கும், தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு புரிந்த குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தத் தீர்ப்புடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் முடிவுக்கு வந்துவிடவில்லை” எனவும், “இத்தாக்குதலை வழி நடத்திய, திட்டமிட்ட மற்றும் இதன் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல் இன்னமும் வெளிவர வேண்டியுள்ளதாகவும் சுதத்த திலக்கசிறி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

சுதத்த திலக்கசிறி ஆளும் கட்சிக்கு மிக ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக மொட்டுக் கட்சிக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *