Thursday, September 24, 2026
உள்நாடு

அனோஜனின் உயிருக்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீட்டிடம் இருந்து பூரண ஆதரவு!

சமூக ஊடகப் பதிவு ஒன்றைக் மையமாகக் கொண்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவின் உயிரைப் பாதுகாக்கும் நடவடிக்கை, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோரால் இன்று (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் நேரடித் தலையீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் தீர்மானமிக்க இராஜதந்திரப் பயணத்திற்காக, இவ்விருவரும் அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் தங்களது சொந்த நிதியைச் செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றக் கோரும் சிறப்பு இராஜதந்திரத் தூதுவர்களாக இவ்விருவரையும் உடனடியாக சவூதி அரேபியாவுக்கு அனுப்ப அரசாங்கம் நேற்று (22) தீர்மானித்ததுடன், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் இன்று நண்பகல் மாலைத்தீவில் வைத்து, இலங்கையின் நீண்டகால நண்பரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியுமான முகமது நஷீட்டைச் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

முகமது நஷீத் மாலைத்தீவின் முதலாவது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாவார். மேலும், அவர் ஒரு பிரபல அரசியல்வாதியாகவும் சமூகச் செயல்பாட்டாளராகவும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஒரு தலைவராவார்.

இந்த முக்கிய சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், அனோஜனின் பதிவு இஸ்லாமிய சமூகத்திற்குப் பாரதூரமான ஒன்றாக இருந்தாலும், ஓர் ஆதரவற்ற இளைஞனின் உயிரைக் கருத்திற்கொண்டு தாம் மனிதநேய அடிப்படையில் அவருக்காகத் தோன்றுவதாகத் தெரிவித்தார். அத்துடன், அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னால் இயன்ற முழுமையான ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

இன்று மாலைத்தீவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும், எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியா நோக்கிப் பயணிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும உறுதிப்படுத்தியுள்ளார்.

அஷ்ரப் A சமத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *