“ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்; உயர்நீதிமன்ற தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். அவரின் அறிவிப்பு பின்வருமாறு,
அறிவித்தல்
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.
உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்துள்ளது.
• சட்டமூலத்தின் வாசகங்கள் 3,4, 6(4) மற்றும் 6(5) அரசியலமைப்புக்கு முரணானது அல்ல; எனவே, இதனை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.
• சட்டமூலத்தின் வாசகம் 6(7), அரசியலமைப்பின் உறுப்புரைகள் 12(1) மற்றும் 14(1)(அ) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கு இணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும்.
• சட்டமூலத்தின் வாசகம் 7 அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) உடன் முரண்படுகிறது.
எனவே, உறுப்புரை 81(உ)ஐ நீக்குவதற்கான முன்மொழிவு திரும்பப் பெறப்பட வேண்டும். 7ஆம் வாசகம் அதன் தற்போதைய வடிவிலேயே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால், அரசியலமைப்பின் 82(5)ஆம் உறுப்புரையுடன் சேர்த்துப் படிக்கப்படும் 84(2)ஆம் உறுப்புரையில் விதந்துரைக்கப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மட்டுமே அது அங்கீகரிக்கப்படும் வகையில் நிறைவேற்றப்பட முடியும்.
• அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) அல்லது உறுப்புரை 14அ(1)க்கு முரண்படாத வகையில், உறுப்புரை 88(1)(ஊ)ஐ முன்மொழியும் சட்டமூலத்தின் வாசகம் 11(1) உள்ளது; எனவே, அது பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம்.
• குழுநிலையில் திருத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளவாறான இச்சட்டமூலத்தின் 11(2) ஆம் வாசகம், அரசியலமைப்பின் 10, 12(1), 14(1)(அ) அல்லது 14அ ஆகிய உறுப்புரைகளுக்கு முரண்படவில்லை; எனவே, அது பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம்.
• இச்சட்டமூலத்தின் 17ஆம் வாசகம், அரசியலமைப்பின் 3ஆம் உறுப்புரையுடன் சேர்த்துப் படிக்கப்படும் 4(இ)ஆம் உறுப்புரைக்கு முரண்படுகிறது. அரசியலமைப்பின் 13(2)ஆம் உறுப்புரையும் இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்துகிறது. எனவே, 17ஆம் வாசகம் அதன் தற்போதைய வடிவில் சட்டமாகுவதற்கு, அரசியலமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையின் கீழ் தேவைப்படும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன், அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையின் பிரகாரம் மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.
