நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யலாம்
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
