ரவூப் மௌலவியின் பத்ரிய்யா பள்ளிவாசலுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான், ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் விஜயம்

இலங்கை வந்துள்ள தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் மற்றும் அவரது தலைமையிலான குழுவினர், காத்தான்குடியிலுள்ள ரவூப் மௌலவி தலைமையிலான பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு, நேற்று (15) செவ்வாய்க்கிழமை இரவு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது, மௌலவி அப்துர் ரவூப் மிஸ்பாஹி தலைமையில், இவர்களுக்கு பெரு வரவேற்பளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், இந்திய தமிழ் நாடு முஸ்லிம் லீக் கட்சியின் பிரதானிகள் எனப் பலரும் இவ்விஜயத்தின்போது பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
“இலங்கையின் ஆன்மீகத்துக்கு வழிகோழியவர்கள் தமிழக ஆலிம்கள்.
இலங்கையில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களையும், அரபு மத்ரஸாக்களையும் அமைப்பதற்கு தமிழக தனவந்தர்கள் பெரும் பங்களிப்புச் செய்தனர். இன்ஷா அல்லாஹ், இந்த ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லெண்ண உறவுகள் எம்மத்தியில் தொடர்ந்தும் நீடித்து நிலைக்க வேண்டும்” என்று, தமிழக ஆலிம்களையும், தமிழக தனவந்தர்களையும் புகழாரம் சூட்டிப் பேசினார்.
இன்று (16) காலை காத்தான்குடியில் நடைபெறும் ஸ்ரீல.மு.கா. வின் 36 ஆவது பேராளர் மாநாட்டிலும், மாலை இடம்பெறும் மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவு தின பேருரை நிகழ்விலும், தமிழக அமைச்சர் ஷாஜஹான் உள்ளிட்ட குழுவினர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
