உள்நாடு

குழந்தையின் நண்பன் கை பேசி அல்ல”_16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை கோரி நேற்று (08) பாராளுமன்றத்தில் பைஸர் முஸ்தபா அழுத்தம்”

“இலங்கையில் சிறுவர்களை ஆன்லைன் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டத்தை அவசரமாகக் கொண்டுவர வேண்டும்” என, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, நேற்று (08) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசினார்.

இலங்கை இளைஞர்களின் மன நலம், கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலையும் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் உடனடி சட்ட நடவடிக்கை அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

சர்வதேச முன்மாதிரிகளை சுட்டிக்காட்டல்
பிரிட்டனின் “Children’s Well-being and Schools Bill” மற்றும் “Online Safety Act”, அத்துடன் அவுஸ்திரேலியாவின் “Social Media Minimum Age Act” ஆகியவற்றை உதாரணம் காட்டிய பைஸர் முஸ்தபா, இலங்கையிலும் இதே போன்ற கட்டுப்பாடு தேவை என்றார்.

இதன்படி, Instagram, TikTok, YouTube, Snapchat, Facebook, Twitter போன்ற முக்கிய தளங்களுக்கு 16 வயதுக்குட்பட்டோரின் அணுகல் கட்டுப்படுத்தப்படும். ஆனால், WhatsApp போன்ற முக்கியமான தகவல் தொடர்புச் சேவைகள் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

தான் ஏற்கனவே 2026 ஜூன் 24 அன்று பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதா ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாகவும், நீதி அமைச்சருடனான கலந்துரையாடலில் அது தற்போது சட்ட வரைவுப் பணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “இதற்கு தனிக் கடன் வேண்டாம். அனைவரும் இணைந்து இந்தச் சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

“இது தொழில் நுட்பத்திற்கு எதிரானது அல்ல. டிஜிட்டல் கருவிகளின் பெறுமதியை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், குழந்தைகளை கடுமையான ஆன்லைன் தீமைகளில் இருந்து சட்ட ரீதியாகப் பாதுகாக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் வெளியீடு அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, இலங்கைச் சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த புள்ளி விபரங்களையும் வெளியிட்டார்.

  • உலகளாவிய அச்சுறுத்தல்: சைபர் அச்சுறுத்தல்களில் இலங்கை உலகில் 20 ஆவது இடத்தில் உள்ளது. ஒரு வருடத்தில் 91 இலட்சம் அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • ஆரம்ப அணுகல்: இலங்கையில் 52.8 விகிதமான இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். முதல் முறை இணையத்தைப் பயன்படுத்தும் சராசரி வயது 13.
  • அந்நியர்களுடன் தொடர்பு: 46.3 விகிதமான சிறுவர்கள் அந்நியர்களுடன் ஆன்லைனில் பேசியுள்ளனர். அவர்களில் 27.9 விகிதமான பேர் நேரில் சந்தித்துள்ளனர்.
  • பாதிப்பு:
    28 விகிதமான பேர் ஆன்லைன் வன்முறையைச் சந்தித்துள்ளனர். 28 விகிதமானோருக்கு ஆபாசமான செய்திகளும், 27 விகிதமானோருக்கு சைபர் மிரட்டலும் வந்துள்ளது.
  • ‘Sextortion’ நெருக்கடி:
  • 5 பேரில் 1 சிறுவர், தாங்கள் அனுப்பிய தனிப்பட்ட புகைப்படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
  • புகார் தராத நிலை: பாதிக்கப்பட்ட 92 விகிதமான சிறுவர்கள் சமூக அவமானம் காரணமாக புகார் கூடத் தருவதில்லை.
  • CSAM:
    1000 பேருக்கு 27.8 என்ற விகிதத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் கிடைக்கின்றன.

“குழந்தையின் சிறந்த நண்பன் இன்று கை பேசி”
சட்ட எல்லைகள் இல்லாததால், ஆன்லைனில் சந்தித்த அந்நியர்களால் பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் விற்பனை, இணைய துன்புறுத்தலால் தற்கொலை போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கை பேசிப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதாகவும், “சட்டம் தடுக்கிறது” எனக் கூறுவதற்கு அவர்கள் இந்தத் தடையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

“முன்பு குழந்தைகள் வெளியே விளையாடினார்கள். இன்று குழந்தைகளின் சிறந்த நண்பன் கை பேசி. தொலைபேசி அடிமைத்தனம் குழந்தைகளை தனிமையாக்கி, மன நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது” என உளவியலாளர்களின் எச்சரிக்கையையும் அவர் மேற்கோள் காட்டினார்.

ஒருமித்த நடவடிக்கைக்கு அழைப்பு
வயது சரி பார்பு முறைகளை நடைமுறைப்படுத்தி, சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் எனவும் கோரினார்.

“இந்த மசோதா ஒவ்வொரு நாளும் தாமதமாகும் போதும், ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகத்தில் பரவுகிறது. எனவே, இலங்கையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்தச் சட்டம் உடனடியாகத் தேவை” எனவும் பைஸர் முஸ்தபா பாராளுமன்றத்தில் மேலும் வலியுறுத்தி, தனது உரையை நிறைவு செய்தார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *