உள்நாடு

முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்க திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுப்பு – முஜிபுர் ரஹ்மான்

முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமைகளை இலக்கு வைத்தும் திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்காக முஜிபுர் ரஹ்மான் ஆதரவாக குரல் கொடுக்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாம் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆழ்ந்த கரிசனை கொண்டவராகவும், தமது கொள்கைகளில் உறுதியுடன் செயற்பட்டு வருபவராகவும் இருப்பதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் வைத்தியர் ஷாபி தொடர்பான விவகாரத்திலும் தாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபர் ஒருவரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாக மாத்திரமன்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமாகவே அந்த விவகாரத்தை தாம் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அந்த விவகாரம் தொடர்பிலும் அனைத்து மட்டங்களிலும் தாம் வெளிப்படையாக கருத்துகளை முன்வைத்ததாகவும், அது அன்றைய ஆட்சியாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால் தமக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அரசியல் கட்சி அல்லது ஆட்சியைப் பொருட்படுத்தாமல் துணிந்து குரல் கொடுப்பது தமது அரசியல் பொறுப்பு எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல், அவற்றை தகனம் செய்யுமாறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது. அதனை செய்தவர் அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் என்பது நிரூபன மான சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் அறிவியல் ரீதியாக ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதால் எந்தவிதமான தொற்று அபாயமும் ஏற்படாது என இலங்கை அரசுக்கும் சுகாதார அமைச்சுக்கும் அறிவித்திருந்த போதிலும், ஜனாஸாக்களை தகனம் செய்யும் பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக அவரே இன்றும் அதே பதவியில் இந்த அரசில் இருக்கின்றார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேபோன்று, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் தம்மையும் முஸ்லிம் சமூகத்தையும் தொடர்புபடுத்தி பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அழுத்தங்களும் அநீதிகளும் அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தினர் பல்வேறு இழப்புகளை சந்தித்ததாகவும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், உயிரிழப்புகளும் இடம்பெற்றதாகவும், பள்ளிவாசல்கள் மற்றும் புனித குர்ஆன்கள் அவமதிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக தாம் குரல் கொடுத்தபோது, அதனை நசுக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், பலஸ்தீனம் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிராக இலங்கையிலும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது, அதற்கும் தமக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் மௌனம் காப்பதாகவும், சிலர் தங்களுக்கு வழங்கப்படும் உரைகளை மாத்திரம் வாசித்துவிட்டு செல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பணியில் இருந்து தாம் பின்வாங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நோக்கில் பல்வேறு திசைகளில் இருந்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது உண்மை எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பிரசாரங்களுக்கு சமூகத்தைச் சேர்ந்த சிலரும் அறிந்தோ அறியாமலோ துணைபோவது கவலையளிப்பதாகவும், இவ்வாறான நிலை தொடருமானால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பும் பிரதிநிதித்துவமும் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக பல்வேறு நியமனங்கள் தொடர்பில் காணப்படும் ஒப்பீட்டளவிலான வேறுபாடுகளையும் இதற்கு ஓர் உதாரணமாகக் கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஆழ்ந்த சிந்தனையுடனும் விடயங்களை சரியாகப் புரிந்துகொண்டு அவற்றை திறம்பட முன்வைக்கும் ஆற்றலுடனும் கூடிய புதிய தலைமுறையினர் அரசியலிலும் சமூகத்தின் ஏனைய துறைகளிலும் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒரு சில ஆயிரம் ரூபாய்களுக்காக குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் கூட, முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்களின் குரல்களை நசுக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எத்தகைய பிரசாரங்கள், அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்தாலும், இறை நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக தாம் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *