கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவும் புனரமைக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு நிகழ்வும்
கம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் ‘அல் பத்ரியா விருதுகள் – 2025’ நிகழ்வும், புனரமைக்கப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் மாணவர் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் கடந்த புதன்கிழமை (02.09.2026) பாடசாலைப் பிரதான மண்டபத்தில் அதிபர் அஸ்மிர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முளப்பர், கௌரவ அதிதியாக வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷைக் எம்.ரீ.எம். தவ்ஸீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய அதிதிகளும் கலந்துகொண்டனர்.
கடந்த வருடம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன்போது விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், கடந்த கல்வியாண்டில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பத்து மாணவ, மாணவிகளுக்குப் பிரதம அதிதியினால் விசேட விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் நிர்வாகம், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பழைய மாணவர் சங்கம் (OBA), பழைய மாணவிகள் சங்கம் (OGA) மற்றும் பாடசாலை நலன்புரி சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவிற்கான முழுமையான அனுசரணையை திரு. ஏ.எம்.எம். சப்ராஸ் வழங்கியிருந்தார்.
புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு
அதே தினத்தில், அரச நிதி ஒதுக்கீட்டில் கம்பஹா கல்வி வலயத்தினூடாக் கிடைக்கப் பெற்ற பழுதுபார்ப்புக்கான நாற்பது இலட்சம் ரூபா நிதியின் ஊடாக பழுதடைந்த நிலையில் இருந்த பாடசாலையின் இரு கட்டடக் கூரைகள் முழுமையாகத் திருத்தி அமைக்கப்பட்டு, பிரதி அமைச்சர் முனீர் முளப்பரின் மூலம் மீளவும் திறந்துவைக்கப்பட்டு மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
வாசிகசாலைக் கட்டடம் மற்றும் ஆய்வு கூடக் கட்டடங்களே இவ்வாறு புனரமைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.











