உள்நாடு

கடும் வெப்பம் காரணமாக யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக, வன விலங்குகள் மற்றும் வன விலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற் கொண்டு, யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை, தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இரு வலயங்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என, வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.

இன்று (07) ஊடகமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக, வன விலங்குகள் நீர்ப் பற்றாக்குறை மற்றும் வெப்ப அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அதிகளவான சுற்றுலா ஜீப் வண்டிகள் வனப்பகுதிக்குள் செல்வதால், தற்போதைய சூழ்நிலையில் வன விலங்கு அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வறண்ட வலயத்தில் அமைந்துள்ள யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்கள் மட்டுமன்றி, மன்னார் மற்றும் வில்பத்து தேசிய வனங்களை அண்மித்த பகுதிகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பிலும் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.

தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த வனப்பகுதிகளை தற்காலிகமாக மூடுவதற்கோ, அல்லது வன விலங்குகள் மற்றும் அதிகாரிகள் வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகாமல் செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *