Saturday, August 22, 2026
Latest:
உள்நாடு

‘மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன்மனனப் போட்டியில்’ வெற்றியீட்டிய மாணவனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

புனித மக்கா நகரில் இடம்பெற்ற 46ஆவது ‘மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் – குர்ஆன் மனனப் போட்டியில்’ வெற்றியீட்டிய இலங்கை மாணவன் அல் – ஹாபிழ் இம்தாத் இயாஸுக்கு இன்று (22) சனிக்கிழமை அதிகாலை விமான நிலையத்தில் வரவேற்களிக்கப்பட்டது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸா ஆகியன இணைந்து இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் கல்கின்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் முஸ்லிம் சலாஹூதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அப்ரோஸ் அஹமட், திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரும் குர்ஆன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளருமான முப்தி முர்ஷி, பிரதி அமைச்சர் முனீர் முளப்பரின் இணைப்புச் செயலாளர் எல்.ஐ.ஏ.எம். சாஜஹான், ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்கின்னையைச் சேர்ந்த உலமாக்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

இதன்போது, மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்ற ஏனைய மூன்று இலங்கை மாணவர்களும் பங்கேற்றனர்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார மற்று தஃவா அமைச்சினால் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் 5ஆம் பிரிவில் 3ஆம் இடத்தினை பெற்றுக்கொண்ட அல் – ஹாபிழ் இம்தாத் இயாஸுக்கு 55,000 சவூதி ரியல்கள் (சுமார் 4,900,000 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டது.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு, கொழும்பிலுள்ள சவூதி தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய இணைந்து 3ஆவது தடவையாக கடந்த ஜனவரியில் நடாத்திய தேசிய அல் – குர்ஆன் மனனப் போட்டியில் இந்த மாணவன் இரண்டாம் பிரிவில் முதலிடத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *