சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தனது முதல் சுதந்திர தின தேசியக் கொடியேற்றினார்
தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் தான்; அதனை நோக்கி தான் நமது அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது சென்னை கோட்டையில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு
சென்னை,
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில்
முதல்வர் ஜோசப் விஜய் தனது முதல் சுதந்திர தின விழாவில், சனிக்கிழமை தேசியக் கொடியேற்றினார்.
இந்தியா முழுவதும் சனிக்கிழமை சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த விழாவில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார்.
இதற்காக முதல்வர் ஜோசப் விஜய் சனிக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், சென்னை காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
சனிக்கிழமை காலை சுமார் 8.35 மணியளவில் கோட்டை முன்பாக அமைக்கப்பட்டுள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்ற முதல்வர் ஜோசப் விஜய் மேடையை வந்தடைந்தார். அவரை தலைமைச் செயலாளர் சாய்குமார் வரவேற்றார். அதன்பிறகு மேடைக்கு வந்த விஜய், அங்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு கொடிக் கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் விஜய் சுதந்திர தின உரையாற்றினார்.
விழாவில், முதல்வர் விஜய் விஜய்யின் தாய் சோபனா, தந்தை சந்திரசேகர், நடிகை த்ரிஷா, அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், கே. ஏ. செங்கோட்டையன்,ராஜ்மோகன், ஏ. எம். ஷாஜஹான் மற்றும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய கோடியேற்றிய பிறகு முதல்வர் விஜய் ஜோசப் பேசியதாவது : “அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள். தங்கள் உயிரை, உடமை, வாழ்க்கையை இழந்து நமக்காக சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், இதில் பிரபலமானவர்கள், பெயர் தெரியாதவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது வீர வணக்கங்கள்.
நாம் அடிமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் வந்தாலே மக்களிடையே ஒரு ஒற்றுமை வந்துவிடும். எல்லோரும் ஒரே மாதிரியாக யோசித்து ஒன்று சேர ஆரம்பிப்பார்கள். அப்படி ஒன்று சேரக்கூடிய இடத்தில்தான் சாதி உடையும், மதம் உடையும், மொழி, இனம் என எல்லாமே உடைந்து நொருங்கும்.
அப்படி உடைந்து நொருங்கக்கூடிய இடத்தில் இருந்து கிடைப்பதுதான் உண்மையான சுதந்திரம். அப்படித்தான் நமது மகாத்மா காந்தி தலைமையில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இன்று நாம் அந்த சுதந்திரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு படிப்படியாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்றத்தை நாம் அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமையும்கூட.
நமது தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்குச் சமமான ஒரு விஷயம்தான். அதை நோக்கித்தான் நமது அரசு செயல்பட்டு வருகிறது.
386 ஆண்டு பழமையான இந்த கோட்டையில், இந்த 80வது சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றவும், உங்கள் மத்தியில் உரையாற்றவும் எனக்கு நீங்கள் வாய்ப்பை அளித்திருக்கிறீர்கள். அதற்காக, உலகம் முழுவதும் உள்ள எனது தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களும், ஜென்சி இளம் சிங்கப்படை தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான் தமிழ்நாட்டை லஞ்சம் லாவண்யம் அற்ற, போதைப் பொருள் கலாச்சாரம் இல்லாத, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி அடிப்படையில் வெளிப்படையான, நேர்மையான, உண்மையான நிர்வாகத்தை நாம் செயல்படுத்தி வருகிறோம்.
பொதுவாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது; மக்கள் நலன்தான் மிக மிக முக்கியம். அந்த அடிப்படையில்தான் தவெக அரசு செயல்பட்டு வருகிறது. அதே அடிப்படையில்தான் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் நாம் மத்திய அரசோடு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போடு இருக்கிறோம். அதே நேரத்தில் தமிழ்நாடு நலன் சார்ந்த விஷயங்களில் மாநில அரசுக்கு எதிரான மத்திய அரசின் முடிவுகளை தவெக அரசு எப்போதும் எதிர்க்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
முந்தைய ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை நமது அரசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணத்துக்கு அம்மா உணவகம் திட்டம். இந்த திட்டத்தை நாம் இன்னும் மெருகேற்றி வருகிறோம். அதேபோல், காலை உணவு திட்டத்தை 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தி வரும் செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாளில் தொடங்க இருக்கிறோம்.”
தாய்நாட்டிற்காக தியாகம் செய்த முன்னாள் படை வீரர்களின் நலன் கருதி அவர்களது இரண்டு மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத நிதியுதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். வீரபாண்டியன் கட்டபொம்மன், மருது சகோதரர்களின் வழி தோன்றல்களுக்கு வழங்கப்படும் மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.






