Tuesday, August 11, 2026
Latest:
உள்நாடு

எந்தவொரு அரசியல்வாதியையும் பள்ளிவாயலில் கெளரவிப்பதில்லை; ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளருக்கு மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் காட்டமான கண்டனம்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஹலால்தீனுக்கு எதிராக மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை நேற்றைய (09) திகதியிடப்பட்ட உத்தியோகபூர்வ கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மீராவோடை மீராஜும்ஆப் பள்ளிவாயலில் எமது நிருவாக சபை உறுப்பினர்களின் சொந்த செலவில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக கடமையினை பொறுபேற்றுக் கொண்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைஸ2026.06.25ஆம் திகதி எமது பள்ளிவாயலில் வரவேற்று கௌரவிப்பு நடாத்திய நிகழ்வினை ஏற்றுக் கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்தில் இதனை பார்வையிட்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஹலால்தீன் பள்ளிவாயல் நிதியை நிருவாகம் வீண் விரயம் செய்ததாக விமர்சித்து குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார்.

இது எமது நிருவாகத்திற்கு மத்தியில் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு அரசியல் இலாபங்களையோ தனிப்பட்ட தேவைகளை அடைந்து கொள்வதற்காகவோ அல்லாமல் பொதுமக்களின் நலனுக்காக மாத்திரமே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் இவர் இதனை இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் இம்மாதம் 2026.08.05ஆம் திகதி மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களை பாராட்டுகின்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற போது மீராவோடை மீராஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகம் சாதாரண பொலிஸ் அதிகாரியை வரவேற்று கௌரவிப்பு நிகழ்வினை நடாத்தி பள்ளிவாயலின் நிதியை வீண் விரயம் செய்ததாகவும் தான் இப்பிரதேசத்தினுடைய தவிசாளராக இருந்தும் தன்னை கெளரவிக்காமல் உதாசீனம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

இப்பாடசாலையில் இடம் பெற்ற மாணவர்களை பாராட்டுகின்ற வைபவத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக பள்ளிவாயல் நிருவாகத்தை சமூகத்தினுடைய பொறுப்பு வாய்ந்த நிறுவனத்தின் தவிசாளர் என்பதை மறந்து தன்னுடைய முதிர்ச்சிக்கு அப்பால் அவமரியாதையாக பேசியுள்ளார்.

எமது பள்ளிவாயல் நிருவாகம் அரசியல் சார்பற்ற நிலையில் இயங்கி வருவதனால் எமது பிராந்தியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு முன்னாள் தவிசாளர்களாக கடமையாற்றிய முகம்மது முத்து சேர்மன், முகைதீன் அப்துல் காதர், லெப்பை ஹாஜியார், கே.பி.எஸ்.ஹமீட், ஏ.எல்.எம்.நௌபர், IT. அஸ்மி, எம்.எச்.எம்.பைரூஸ் ஆகிய தவிசாளர்கள் எவரும் கௌரவிக்கப்படவில்லை. குறிப்பாக கே.பி.எஸ்.ஹமீட் அவர்கள் தற்காலத்தில் எமது பள்ளிாயல் நிருவாகத்தில் இருந்தும் கூட கௌரவிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே தற்போதைய தவிசாளர் தான் கௌரவிக்கப்பட வேண்டுமென்று நிருவாக உறுப்பினர்கள் சிலரிடம் கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாத ஒரே காரணத்திற்காக பொது நிகழ்வுகளில் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை எமது பள்ளிவாயல் நிருவாகம் வன்மையாக கண்டிக்கின்றது.

இதற்கு முன் இருந்த எந்த அரசியல்வாதியும் பள்ளிவாயல் நிருவாகத்தினை இவ்வாறு தரக்குறைவாக பேசியதில்லை. தன்னை கௌரவிக்கவில்லை எனும் காரணத்தினால்தான் பள்ளிவாயலினால் ஆரம்பித்து நடாத்தப்பட்டுவந்த வாராந்த சந்தையினை சுமுகமான தீர்மானத்தினை மேற்கொண்டு மீண்டும் பள்ளிவாயலுக்கு பெற்றுத்தருவதற்கு கரிசணை காட்டாமல் விட்டார் அல்லது தடுத்து விட்டாரோ எனும் சந்தேகமும் மக்கள் மத்தியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, எமது பள்ளிவாயல் நிருவாகம் கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் தவிசாளர்களாக இருந்த எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் பள்ளிவாயலில் கௌரவிப்பு நிகழ்வு நடாத்தவில்லை.

எனவே, தற்போதைய தவிசாளரை கௌரவிக்காமல் விட்டுவிடுவதற்கு எமக்கு எவ்வித அரசியல் பின்னணியும் இருக்கவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு, அண்மைக்காலத்தில் அரச அதிகாரிகளான பிராந்தியத்தில் கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர், கோட்டக்கல்வி அதிகாரி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை செயலாளர் ஆகியோரை மாத்திரமே கௌரவித்த வரலாறுண்டு.

அந்த வகையில், எமது சமூகத்தின் போதை ஒழிப்பு மற்றும் சமூகப்பிணக்குகள் தொடர்பாக எமது பள்ளிவாயல் பொலிஸ் நிலையத்துடன் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டிய தேவைப்பாட்டினால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பு தேவைப்பட்டமையினாலும் இக்கௌரவிப்பு நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

மேலும் எதிர்காலத்தில் பொருத்தமாயின் அரசியல்வாதி ஒருவரை கௌரவிப்பதில் அப்போதிருக்கும் பள்ளிவாயல் நிருவாகம் ஆலோசனை செய்து கௌரவிப்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை.

மேலும் குறித்த நிகழ்வில் உரையாற்றும்போது தனக்கூடாக தனவந்தர்களிடமிருந்து இறை திருப்பதியை நாடி செய்யப்பட்ட நற்காரியங்களை தனக்கு கௌரவம் வேண்டும் என்ற ஒரே எண்ணத்திற்காக இவ்வாறு பொது நிகழ்வுகளில் சொல்லிக்காட்டி நன்மைகளை இலக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாகின்ற விடயத்தினை செய்து கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அத்தோடு, இவர் எமது மீராஜும்ஆப் பள்ளிவாயலின் மேல் தள கூரை வேலைக்காக ரூபா. 6,500,000.00 அறுபத்தி ஐந்து இலட்சம் வழங்கியதாக கூறிய தொகையானது உண்மைக்கு புறம்பானதாகும். மாறாக இவரினதும் ஏனைய சில சகோதரர்களினதும் முயற்சியினால் லண்டனில் வசிக்கும் கலந்தர் டொக்டர் குடும்பத்தினரினால் பள்ளிவாயல் கூரை அமைப்பதற்காக வழங்கப்பட்ட நிதித் தொகை ரூபா. 3,960,000.00 முப்பத்தி ஒன்பது இலட்சத்தி அறுபதாயிரம் ஆகும். மேலும் உதுமான் பாடசாலை காணி கொள்வனவிற்காகவும் மற்றும் பதுரியா அல்மினா பாடசாலைக்கு வழங்கியதாகவும் கூறிய நிதியுதவியானது அவரது சொந்த நிதியில் வழங்கப்பட்டவை அல்ல. மாறாக எமது பிரதேசத்தை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் தனவந்தர்களின் நிதியினை இவர் ஊடாக வழங்கப்பட்டது என்பதனை மக்களுக்கு அறியப்படுத்த விரும்புகின்றோம்.

ஆகவே பள்ளிவாயல் நிருவாகம் என்பது ஓர் ஊரின் தலைமைத்துவமாகும். மக்களால் நியமிக்கப்பட்ட இந்நிருவாகம் ஆலோசனை அடிப்படையில் நடாத்துகின்ற நிகழ்வினை தனிப்பட்ட காரணங்களுக்கா அதனை விமர்சிப்பது அல்லது பொது இடங்களில் தரக்குறைவாக பேசுவது போன்ற விடயங்கள் அந்த ஊர் மக்களையும் அவமானப்படுத்துகின்ற விடயமாகும். இதனால் அவரின்மேல் மக்களுக்கு உள்ள நன்மதிப்பை இழக்கச் செய்கின்ற ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் தவிசாளர் இதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தான் பேசிய இவ்விடயத்தினை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் கடந்த 2026.08.05ஆம் திகதி நடைபெற்ற எமது நிருவாக சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக எமது பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இக்கண்டன அறிக்கை வெளிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எஸ்.எம்.எம். முர்ஷித், எச்.எம்.எம். பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *