எதிர்காலத்தில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலையிலிருந்து உருவாக்க வேண்டும் – இம்ரான் எம்.பி.
எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் அடுத்த கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் புதிய அத்தியாயமாக உள்ளதாக (25) கிண்ணியாவில் இடம்பெற்ற கடினப் பந்து போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
கிண்ணியா பிரீமியர் லீக் (KPL) கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தொடக்கத்தை முன்னிட்டு, கிண்ணியா கிராமக்கோட்டு மைதானத்திலிருந்து புகாரியடி ஊடாக பைசல் நகர் அல்-இர்பான் மைதானம் வரை வீரர்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டதுடன், KPL கிண்ண அறிமுகத்தையும், தொடரின் தொடக்க விழாவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததன் பின் நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில் ,
திருகோணமலை மாவட்டத்தில் கடினப்பந்து கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்தி, திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை உயர்மட்ட போட்டிகளுக்கு தயார்படுத்துவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.
எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல; திருகோணமலை மாவட்ட விளையாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புதிய பயணமாகும்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வை மிக நேர்த்தியாகவும், வெற்றிகரமாகவும் ஏற்பாடு செய்த கிண்ணியா பிரீமியர் லீக் (KPL) ஏற்பாட்டுக் குழுவினருக்கும், இதற்கு பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.






