உள்நாடு

ஒலுவில் ஜலால்டீன் சண்ஷிதா, பேராசிரியர் சுல்தான் பாவா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

ஒலுவிலைச் சேர்ந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஜலால்டீன் சண்ஷிதா, பேராசிரியர் சுல்தான் பாவா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தென்கிழக்குப் பலகலைக்கழகத்தின் 18 ஆவது பொது பட்டமளிப்பு விழா, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் (25,26,27) ஏ.ஆர்.எம். மன்சூர் ஞாபகார்த்த மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில், 3398 மாணவர்கள் பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்ற நிலையில், இப்பல்கலைக் கழகத்ததின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த (2018/2019 குழு) மாணவி ஒலுவில் ஜலால்டீன் சண்ஷிதா, இரசாயனவியல் விசேட (Special) துறையில் GPA 3.90/4.00 மதிப்பெண் பெற்று முதலாம் தர (1st Class) அதி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொண்டதையிட்டு இப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஒலுவில் வரலாற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் இவ்வாறு தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும் என்பதுடன், இது ஒரு வரலாற்றுச் சாதனையாகவும் கணிப்புப் பெறுகின்றது.

இம்மாணவி, ஒலுவில் கிராமத்தின் 95 வருட கால கல்வி வரலாற்றில் முதலாவதாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ‘9 ஏ’ சித்திகளைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். அத்துடன், உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியலில் ‘ஏ’ சித்திகளையும், 5 ஆம் தர புலமைப்ப பரிசில் பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் தனது பல்கலைக்கழகக் காலத்தில் இரசாயனவியல் சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து, பல்கலைக்கழகத்திற்கும் பெற்றோருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் ஒலுவில் மண்ணுக்கும் பேரும் புகழும் கௌரவமும் பெற்றுக் கொடுத்துள்ளதோடு, துறை சார்ந்த கல்வியியலாளர்களால் பாராட்டப்பட்டு பெறுமதிமிக்க சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இம்மாணவி, முன்னை நாள் பிரதம தாதிய மேற்பார்வை அதிகாரியும் முன்னை நாள் திறந்த பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளருமான கலாபூஷணம் கவிஞர் ஒலுவில் எஸ். ஜலால்டீன் – முகம்முது ஜமால்தீன் சித்தி ஹுசைமா தம்பதிகளின் இரண்டாவது புதல்வியுமாவார் என்பது குறப்பிடத்தக்கது.

ஐ. ஏ. காதிர் கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *