டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அம்பாரை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அம்பாரை மாவட்டத்தில் அனைவரினதும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இந்த விடயத்தில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் காரியாலயம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் தொடர்ந்தும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அண்மையில் கல்முனையில் விழிப்புணர்வுக் கூட்டமொன்றை நடத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு அனைவரினதும் ஒத்துழைப்புடன் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் முழுவதும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக நிந்தவூர் பிரதேச செயலகத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை தெரிவித்தார்.

கே ஹமிட்
