இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவராகக் கடந்த நான்கு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் தனது இராஜதந்திரப் பொறுப்புகளை நிறைவேற்றி, தனது சேவைக் காலத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து தாயகம் திரும்பவுள்ள கௌரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்குமிடையிலான நீண்டகால நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய துறைகளில் உறவுகளை விரிவுபடுத்துவதற்காக அவர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் தலைமைத்துவமும் உயர்ந்த பாராட்டிற்குரியன.
குறிப்பாக, இலங்கை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மனிதாபிமான உதவித் திட்டங்கள், சமூக நலப் பணிகள் மற்றும் தேவையுடைய மக்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் அவர் காட்டிய அக்கறை என்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும். பல்வேறு துறைகளில் சவூதி அரேபியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளின் நட்புறவை மக்களின் வாழ்வோடு இணைக்கும் வகையில் செயற்பட்டதிலும் அவரது பங்கு மிகவும் பெறுமதியானதாகும்.
கௌரவ தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுடன் நான் பேணிய தனிப்பட்ட நட்புறவானது அன்பு, மரியாதை மற்றும் பரஸ்பர நம்பிக்கை நிறைந்ததாக அமைந்திருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன். அவரின் எளிமை, அன்பான அணுகுமுறை மற்றும் உண்மையான நட்பு என்றும் எனது நினைவில் நிலைத்திருக்கும்.
அவரது இராஜதந்திரப் பணிகளோடு இணைந்த மனிதநேய அணுகுமுறை, பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவை அனைவரினதும் பாராட்டையும் பெற்றுள்ளன. அவர் ஆற்றிய உன்னத சேவைகள் இலங்கை மக்களின் மனங்களில் நிலையான இடத்தைப் பெறும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.
தாயகம் திரும்பும் கௌரவ தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் மீண்டுமொருமுறை தெரிவித்துக்கொள்வதோடு, அவருடைய எதிர்கால இராஜதந்திர மற்றும் பொதுச் சேவைகளில் எல்லா வெற்றிகளும், நல் ஆரோக்கியமும், இறையருளும் கிட்டிட மனமார வாழ்த்துகிறேன்.
- கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
