உள்நாடு

ஒன்றிணைந்த 6 பிரதான தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள்


இலங்கையின் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. 

இதனடிப்படையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி , இலங்கை தமிழ் அரசு கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளி்ன பிரதிநிதிகள் இன்று கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். 

இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள், குறிப்பாக காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார். 

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஒன்றிணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் காணி அபகரிப்பு இன்றளவிலும் தீவிரமடைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். 

மேலும் இந்த கூட்டணி வெறுமனே ஒன்று சேர்ந்த கூட்டணி அல்ல. மக்களின் நலனுக்காக சேர்ந்த தேசிய மேடை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *