உள்நாடு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபை உறுப்பினராக எம்.எம். இஹ்திசாம் நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபை உறுப்பினராக எம்.எம். இஹ்திசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புத்தளம் மாநகர சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான்காம் வட்டாரத்தில் போட்டியிட்ட எம்.எம். இஹ்திசாம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.

எனினும், கட்சிக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று பெண் பிரதிநிதித்துவத்திற்காக ஒதுக்கப்பட்டு, முன்னாள் புத்தளம் நகர சபை தலைவர் மர்ஹூம் கே.ஏ. பாயிஸின் புதல்வி சதா பாயிஸுக்கு வழங்கப்பட்டது.

மீதமிருந்த மற்றொரு போனஸ் ஆசனத்தை, கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வழங்குவதற்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்களும் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை நடாத்திய போது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் தலைமையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில், கடந்த ஒரு வருடமாக மாநகர சபை உறுப்பினராகப் பணியாற்றிய பர்வீன் ராஜா தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.எம். இஹ்திசாம் சுழற்சி முறையில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் நேற்று செவ்வாய்க்கிழமை (07) வழங்கி வைத்தார்.

புதிய உறுப்பினரான எம்.எம்.இஹ்திசாம் தனது வட்டார மக்களுக்கு தன்னால் இயன்ற அளவில் சிறந்த சேவைகளையும், அபிவிருத்திப் பணிகளையும் வழங்கி சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன்
வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *