விளையாட்டு

நடுநிலைமை தவறிய நடுவரும், பிபா வின் பாரபட்சமும்; ஆர்ஜென்டினாவுடனான தோல்வியின் பின் எகிப்து பயிற்சியாளர் ஹொஸாம் ஹஸன் சாடல்

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் சுப்பர் 16 சுற்றின் மிக விறுவிறுப்பான ஆட்டமொன்றில் நடப்பு சம்பியனான ஆர்ஜென்டினாவிடம் 3:2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் எகிப்து அணி அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இப்போட்டிக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹொஸாம் ஹஸன் (Hossam Hassan), நடுவர்களின் மோசமான தீர்ப்புகள் மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) பாரபட்சமான அணுகுமுறைகள் குறித்து தனது கடுமையான கண்டனங்களையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சுப்பர் 16 சுற்று ஆட்டத்தில் நடப்புச் சம்பியனான ஆர்ஜென்டினா அணியும் முஹம்மது சலா தலைமையிலான எகிப்து அணியும் பலப்பரீட்சை நடாத்தின. இப்போட்டியின் முதல் பாதியில் எகிப்து அணி 1:0 என ஆதிக்கம் செலுத்தியது.

பின்னர் இடம்பெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தின் முதல் நிமிடங்களில் 2ஆவது கோலையும் அடித்து முன்னிலை பெற்றிருக்க ஆட்டத்தின் 79, 83 மற்றும் 90+3 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை உட்செலுத்திய ஆர்ஜென்டினா அணி ஆட்ட நேர முடிவில் 3:2 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

இப் பரபரப்பான போட்டியில் வெற்றியை நலுவ விட்ட எகிப்து அணி தொடரிலிருந்து வெளியேறியது. இப் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு எகிப்து அணியின் பயிற்சியாளரான ஹொஸாம் ஹஸன் கருத்து வெளியிட்டிருந்தார்.

“மிகவும் எளிமையான பின்னணியைக் கொண்ட தங்களது எகிப்து அணி, ஆர்ஜென்டினா போன்ற பெரும் பலம் வாய்ந்த அணிக்கு இணையாக மைதானத்தில் மல்லுக்கட்டியதாக அவர் பெருமிதம் கொண்டார். “உலகிலேயே அதிக விலையுயர்ந்த வீரர்களைக் கொண்ட அணிக்கு எதிராக நாங்கள் சவால் விடுத்தோம். நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சம்பியன்களை விட அனைத்து துறைகளிலும் நாங்களே சிறந்த விளங்கினோம். ஆனால், ஆர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர் மீது ஒருதலைப்பட்சமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது” என ஹஸன் குற்றம் சாட்டினார்.

இப்போட்டியை வழிநடத்திய நடுவர் பிரான்சுவா லெடெக்சியர் (François Letexier) நியமிக்கப்பட்டதற்கு போட்டியின் தொடக்கத்திற்கு முன்பே தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாக ஹஸன் வெளிப்படுத்தினார். போட்டி முடிவடைந்ததும் தனது கோபத்தை மறைக்காத அவர், எகிப்து அணிக்கு ஒரு தண்டனை உதை (Penalty) வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், தங்களது இரண்டாவது கோல் (Mostafa Ziko அடித்த முதலாவது கோல்) நடுவரால் நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் உறுதியாக வாதிட்டார்.

“இந்த வெற்றியைப் பெற நாங்கள் தகுதியானவர்கள். மைதானத்தில் நியாயமான ஆட்டமோ (Fair Play), மரியாதையோ இருக்கவில்லை. நாங்கள் பெரும் அநீதிக்கு ஆளாகியுள்ளோம். பிபா அமைப்பு ‘ஃபேர் பிளே’ என்ற வாசகத்தை முழங்கினாலும், அதனை மைதானத்தில் காண முடிவதில்லை. நடுவர்களின் தவறுகள் மட்டும் இல்லாதிருந்தால் போட்டியின் முடிவு முற்றிலும் வேறொன்றாக இருந்திருக்கும்” என்று அவர் அதிருப்தி வெளியிட்டார்.

போட்டி முடிந்ததும் நடுவர் லெடெக்சியரை நேரடியாக எதிர்கொண்ட ஹஸன், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவருக்கு மஞ்சள் அட்டையும் (Yellow card) காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “இது அநீதியானது என்று நடுவரிடம் கூறினேன். அவர் எதையோ மறைக்க முயல்கிறார், ஆனால் அது தோற்றுவிட்டது. இத்தொடரில் இனிவரும் எந்தவொரு போட்டியையும் நான் பார்க்கப் போவதில்லை” என்றார்.

நடுவர்கள் மட்டுமன்றி, அட்லாண்டா நகரில் நிலவும் கடுமையான வெயிலுக்கு மத்தியில் மதிய வேளையில் (12:00 மணிக்கு) போட்டியை நடத்தியதற்காக ஃபிஃபா நிர்வாகத்தையும் ஹஸன் கடுமையாகச் சாடினார். இது வீரர்களின் உடல்நிலையை மதிக்காத ஒரு அட்டவணை என்று குறிப்பிட்ட அவர், “மதிய வேளையில் யாராவது கால்பந்து விளையாடுவார்களா? பகல் 12 மணிக்கு போட்டி என்றால் வீரர்கள் எப்போது சாப்பிடுவார்கள்? இந்த அட்டவணையைத் தயாரிப்பவர்களுக்கு கால்பந்தைப் பற்றி எதுவுமே தெரியாது” என்று வெளுத்து வாங்கினார்.

இருப்பினும், இத்தனை ஏமாற்றங்களுக்கு மத்தியிலும் தனது வீரர்களின் அசாத்திய போராட்ட குணத்தைப் பாராட்டிய அவர், எகிப்து அணி இன்னும் முதிர்ச்சியடைந்து அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றார். அத்துடன், தங்களது இந்த ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த அரபு உலகிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும் ஹொஸாம் ஹஸன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *