ஜாமிஆ நளீமியா கல்லூரியின் புதிய மாணவர் சேர்க்கைப் பரீட்சை எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில்
பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளீமியா கல்லூரியின் 2026/2027 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கைப் பரீட்சை எதிர்வரும் ஜூன் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் ஆண் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக நேர்முகப் பரீட்சையும் எழுத்துப் பரீட்சையும் நடத்தப்படவுள்ளன.
ஜூன் 27 ஆம் திகதி வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், ஜூன் 28 ஆம் திகதி கிழக்கு, தென், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பரீட்சைகள் நடைபெறும்.
இக்கல்வித் திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் இஸ்லாமியக் கல்வி, அரபு மொழி மற்றும் க.பொ.த. உயர்தரக் கல்வி (கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள்) கற்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இஸ்லாமியக் கல்வியில் சிறப்புப் பயிற்சிகளும் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்புகளும் வழங்கப்படும்.
பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இஸ்லாம், தமிழ், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அவற்றில் குறைந்தது மூன்று பாடங்களில் திறமைச் சித்தி (C) பெற்றிருக்க வேண்டும். வர்த்தகப் பிரிவில் சேர விரும்புவோர் கணிதப் பாடத்திலும் திறமைச் சித்தி (C) பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் 2009 ஜனவரி 31 ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இணையவழி (Online) மூலம் விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள், பரீட்சை நடைபெறும் தினங்களில் நேரடியாக வருகை தந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பரீட்சையில் பங்கேற்க முடியும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 077 650 4765 என்ற இலக்கத்தையும், தொழில்நுட்ப உதவிகளுக்கு 076 372 7066 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ளலாம்.
ஜாமிஆ நளீமியா கல்லூரி
பேருவளை.
(பீ.எம். முக்தார்)
பேருவளை

