உள்நாடு

ஹஜ் விவகாரம் குறித்து கலந்துரையாட நேரம் ஒதுக்கித் தருமாறு றிஷாத் – அமைச்சருக்குக் கடிதம்

அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாகபேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவுக்கு அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். 

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது, 

வரவிருக்கும் பாராளுமன்ற அமர்வு காலத்தில், ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் சில முக்கிய விடயங்கள் குறித்து உங்களுடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். 

இதன் மூலம் ஹஜ் யாத்திரையின் நிர்வாகம், ஏற்பாடுகள் மற்றும் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவானதும் பயனுள்ளதுமான கலந்துரையாடலை முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன். 

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

அவர்களின் பங்களிப்பு மூலம் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தவிர்க்கவும் வழிவகுக்கும் என நம்புகிறோம். 

குறிப்பாக, கடந்த புனித ஹஜ் யாத்திரையின் போது யாத்திரிகர்கள் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்கள் மற்றும் அவை தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள குழப்ப நிலை காரணமாக, இவ்விடயம் குறித்து அனைத்து தரப்பினரின் பங்களிப்புடனான விரிவான கலந்துரையாடல் அவசியமாவதாகவும் அவர் தமது கடிதத்தின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *