உள்நாடு

கொழும்பு ஸாஹிராவின் 85/86 மாணவர் குழுவினரில் மரணித்தவர்களுக்காக ஞாபகார்த்த நிகழ்வு

கொழும்பு, மருதானை, ஸாஹிராக் கல்லூரியின் 85/86 ஆம் ஆண்டு பழைய மாணவர் குழுவினரால், இக்கல்லூரியில் 85 ஆம் 86 ஆம் ஆண்டுகளில் கல்வி பயின்று வபாத்தாகிய மர்ஹூம்களான மாணவர்களின் ஞாபகார்த்தமாக, விசேட துஆப்பிரார்த்தனை வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு, கொழும்பு – மருதானை, ஸாஹிரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில், (21) ஞாயிற்றுக்கிழமை ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

ஸாஹிராக் கல்லூரியின் 85/86 ஆம் ஆண்டுகளின் பழைய மாணவர் குழுவினர், மரணித்தவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் பலரும் மஜ்லிஸில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில், பள்ளிவாசல் இமாம் மௌலவி எம்.எஸ்.எம். அஹ்ஸான் (ரவ்ழி) ‘பழைய மாணவர்கள் பலதரப்பட்ட களியாட்ட நிகழ்வுகளை நடாத்தி குதூகலமாகும் இச்சந்தர்ப்பத்தில், கல்லூரியின் 85/86 குழு பழைய மாணவர்கள் மரணித்தவர்களுக்காக இவ்வாறான பிரார்த்தனை வைபவங்களை வைத்து, இறைவனின் பொருத்தத்தைத் தேடுவது சிறந்ததொரு நன்மையான காரியமாகும்’ என்று அவரது விசேட உரையில் புகழாரம் சூட்டினார்.

அத்துடன் அவர், குர்ஆன் மஜ்லிஸையும் தலைமை தாங்கி சிறப்புற நடாத்தி வைத்தார். மஜ்லிஸின் இறுதியில், மரணித்த மர்ஹூம்களான பழைய மாணவர்களின் பெற்றோர்களும், சகோதரர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. சமூகமளித்திருந்த அனைவருக்கும் 85/86 குழு பழைய மாணவர்களினால் மதிய போஷனம் அளிக்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *