இலங்கை ஹாஜிகளுக்கு மக்கா, மினாவில்அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமை, உண்மை கண்டறிய ஆணைக்குழு அமைக்கவும்; உதுமா லெப்பை எம்.பி கோரிக்கை
இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு இம்முறை ஹஜ்ஜின் போது மக்கா, மினாவில் அடிப்படை வசதிகள் வழங்கப்படாமைக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தவென விஷேட ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு எதிர்காலத்தில் அத்தகைய அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் (09 ஆம் திகதி) பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. ஆளும்கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் சரீப், இவ்வருடம் ஹஜ் கடமைக்காக சென்ற ஹஜ்ஜாஜிகளுக்கு மினாவில் அடிப்படை வசதிகள் வழங்கப்படாமை குறித்து என்னிடம் பலர் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 3500 முஸ்லிம்கள் சென்றுள்ளனர். ஆனால் மினாவில் இலங்கையைச் சேர்ந்த ஹஜ்ஜாஜிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஹஜ்ஜாஜிகளில் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் என எல்லா மட்டத்தினரும் செல்வது வழக்கம். அவர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாவது நியாயமானதல்ல. அம்பாறை மாவட்ட ஹஜ்ஜாஜிகள் ஒவ்வொருவரும் தலா 23 இலட்சத்தில் இருந்து 25 இலட்சம் வரை பணம் செலுத்தியே ஹஜ்ஜுக்காக சென்றனர்.
இவ்வாறான பிரச்சினைகள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்க ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுனில் செனவி, இவ்விடயம் தொடர்பில் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றுள்ளார்.
