உள்நாடு

கலகெதர வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தது வைத்த ஜனாதிபதி.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படும் எந்தவொரு நெருக்கடிக்கும் முகங்கொடுத்து நிலைத்து நிற்கக்கூடிய வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு

உரிய காலப்பகுதிக்குள் இதனை நிறைவு செய்யுமாறு ஒப்பந்தக்காரர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்

– ஜனாதிபதி

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருடங்களை கடந்து செல்வதற்காக அல்ல என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு நெருக்கடிக்கும் முகம் கொடுக்கக்கூடிய நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே என்றும், இன்றைய நாட்டின் பொருளாதாரம் பயணிக்க வேண்டிய திசை குறித்த சரியான தொலைநோக்கு மற்றும் திட்டத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த கால அரசாங்கங்கள் வர்த்தக சந்தையில் அதிக வட்டிக்கு கடன் பெற்று தங்களது ஐந்து வருட காலத்தை கடந்து சென்றபோதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இப்போது பல்வேறு பிரதான பொருளாதார காரணிகளில் வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த பயணப்பாதையின் ஊடாக நாடு மிகவும் வலுவானதொரு பொருளாதாரத்தை நோக்கி பிரவேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அதிவேகப்பாதையின் மூன்றாவது பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரையிலான 18.7 கிலோமீற்றர் பகுதியின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து, கலகெதர பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (29) பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

இன்று இலங்கையில் முதன்முறையாக எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் அரசாங்கம் உருவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடன் நிலைபேற்றுத்தன்மையையும் கடன் முகாமைத்துவத்தையும் சிறந்த மட்டத்தில் பேணி, நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், உள்நாட்டு நிதி மற்றும் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 112.44 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 04 வழிகளைக் கொண்ட இந்த வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளை 2029-05-28 ஆம் திகதி நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான முதற்கட்ட நிர்மாணப் பணிகளை அடுத்த வருட நடுப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

இன்று நாம் கண்டி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்காகக் கொண்ட முக்கிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டத்திற்கு அடித்தளம் இடுகிறோம். இந்தத் திட்டம் நமது நாட்டின் சமூக வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு வலுவான விடயமாக அமையும்.

இந்தத் திட்டத்தைத் தொடங்குவதில் நமது அமைச்சர், பிரதி அமைச்சர்கள், செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் முயற்சி எடுத்து செயற்பட்டுள்ளனர். அதேபோல், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வேலைத்திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்வார்கள் என்று நாங்கள் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

டொலரின் ஏற்ற இறக்கத்துடன் நாட்டில் பெரும் கருத்தாடல்கள் எழுந்துள்ளன. அரசாங்கம் வீழ்ச்சியடையும், ஆலோசனைகளைப் பெறுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். நமது பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் மற்றும் நாம் பயணிக்க வேண்டிய திசை குறித்த தொலைநோக்குப் பார்வையுடனும் திட்டத்துடனும் நாம் செயல்பட்டு வருகிறோம். எனவே, எந்த நேரத்திலும் ஏற்படும் சூறாவளியையும், எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய ஸ்திரமற்ற தன்மையையும் மிக விரைவாக மீண்டும் ஸ்திர நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான வலுவான பொருளாதாரம் நமக்குத் தேவை. பொருளாதாரத்தின் அனைத்து திசைகளிலுமிருந்து இன்னும் நாம் சக்திகளைத் திரட்டவில்லை என்பது உண்மைதான். நமக்குத் தேவையான முதலீடுகளை நாம் இன்னும் தேவையான அளவில் ஈர்க்கவில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் செயற்படக்கூடிய அறிவுள்ள ஒரு புதிய தலைமுறையை நாம் இன்னும் உருவாக்கவில்லை. உலகச் சந்தையை வெல்லக்கூடிய பொருளாதாரத் திறனை நாம் இன்னும் அடையவில்லை. ஆனால், எந்தவொரு புயலுக்கும், எந்தவொரு நெருக்கடிக்கும் முகங்கொடுத்து அசையாமல் நிற்கக் கூடிய ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே நமது சவாலும் எதிர்பார்ப்பும் ஆகும்.

இன்று உள்நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை எம்மால் கணிசமான அளவில் எதிர்கொள்ள முடிகிறது. கடந்த ‘டித்வா’ சூறாவளியை எதிர்கொள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடியை ஒதுக்குவதற்கு எங்களால் முடிந்தது. இலங்கை வரலாற்றில் பேரழிவு ஒன்றின் போது அதிகளவிலான தொகை ஒதுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த வகையில், உள்நாட்டுப் பேரழிவுகளுக்கு வலுவாக முகம் கொடுக்கும் ஆற்றல் எமக்குக் கிடைத்துள்ளது. உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியாக ஏற்படும் நெருக்கடிகளையும் தாங்கிக்கொள்ளக் கூடிய மட்டத்திற்கு நமது பொருளாதாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும். வல்லரசு நாடுகளுக்குத் காய்ச்சல் பிடித்தால், நமக்கு நியூமோனியா காய்ச்சல் பிடிக்கும்’ என்று ஒரு கருத்து உண்டு. அப்படியாயின், வல்லரசு நாடுகளில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி நமக்கு ஒரு பெரிய பேரழிவைக் கொண்டு வரும் என்பதாகும். வெளிப்புற அதிர்ச்சிகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம். அத்தகையதொரு சூழ்நிலையைத் தாங்குவதற்காக நாம் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது?

இன்று நாம் பொருளாதாரத்தின் பல முக்கிய சாதகமான காரணிகளை வெற்றிகொண்டிருக்கிறோம். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நமது தேசிய வருமானத்தை 16.7% ஆகக் கொண்டுவந்துள்ளோம். இது ஒரு முக்கியமான நிலைமையாகும். இதன் காரணமாக, திறைசேரியில் மேலதிகப் பணம் சேரத் தொடங்கியது. 2022, 2023 காலப்பகுதியில் திறைசேரிக் கணக்கானது 800 பில்லியன் வங்கி மேலதிகப் பற்றுடன் காணப்பட்டது. திறைசேரியில் பணம் இருக்கவில்லை.

இதன் காரணமாக, வங்கிகளினால் தனியார் துறைக்கோ அல்லது வர்த்தகர்களுக்கோ கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிதிச் சந்தை சுருங்கத் தொடங்கியது. ஆனால், எம்மால் திறைசேரிக் கணக்கை 120,000 கோடி மேலதிகத்தைக் கொண்டுவர முடிந்தது. இன்று அரசாங்கம் பிரதான கடன் பெறுநராக இருப்பதற்குப் பதிலாக, தனியார் துறைக்குக் கடன்களை வழங்கி வருகிறது.

2024 ஆம் ஆண்டில் வங்கி முறைமையினால் தொழில்துறைகளுக்காக 700 பில்லியன்களே ஒதுக்கப்பட்டிருந்தது. 2025 ஆம் ஆண்டில் தனியார் துறைக்கு 2000 பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைவதற்குக் காட்டும் ஒரு அறிகுறியாகும். இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் தனியார் துறைக்கு 250 பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய திருப்புமுனையாகும். அதேபோல், 2027 ஆம் ஆண்டில் மூலதனச் செலவினமாக 2 ட்ரில்லியனை ஒதுக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிவேகப்பாதைக்கு மூன்று ஆண்டுகளுக்கு 112 பில்லியன் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட வருடத்திற்கு 35 பில்லியன் ஒதுக்கப்பட வேண்டும். குருநாகல் –

தம்புள்ளை வீதியின் பணிகளையும் ஆரம்பிக்குமாறு நாம் கூறினோம், அதற்காக எம்மால் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். அத்துடன், புகையிரத மின்மயமாக்கல் திட்டத்திற்காகவும் எம்மால் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும்.

இந்த ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்தில் செலவிடாத பிரச்சினையை நாம் எதிர்கொள்கிறோம். அதனால், தாமதம் என்பது எப்போதும் ஒரு நஷ்டமாகவே மாறியுள்ளது. எனவே, இதனை உரிய காலத்திற்குள் கண்டிப்பாக நிறைவு செய்ய வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அதிவேகப்பாதைகள் மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நாம் ஏற்படுத்துகிறோம். வலுசக்தி மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், ரயில் பாதைகள் மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நாம் கட்டியெழுப்புகிறோம். அத்தகைய திட்டமிட்ட தொலைநோக்கு பார்வையுடனான அபிவிருத்திப் பாதைக்குள் நாம் தற்போது பிரவேசித்துள்ளோம்.

இலங்கையில் முதன்முறையாக எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் அரசாங்கமொன்று உருவாகியுள்ளது. இன்று நாம் கடன் பெறும்போது, 2040ஆம் ஆண்டில் அதனை நம்மால் திருப்பிச் செலுத்த முடியுமா என்று பார்த்துக்கொண்டே பெறுகிறோம். நமது கடன் பெறுதல்களை தேசிய உற்பத்தியில் 4% வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் பொருளாதாரத்தால் தாங்க முடியாது. நாம் அத்தகையதொரு நிலையான கொள்கையில் இருக்கிறோம். எனவே, இன்று நாம் கடன் பெறும்போது 2035இலும், 2040 இலும் அந்த வரம்பு மீறப்படுகிறதா என்று பார்த்தே கடன் பெறுகிறோம். அப்படித்தான் கடனின் ஸ்திரத்தன்மை உருவாக்கப்படுகிறது. கடன் முகாமைத்துவத்தை சிறந்த மட்டத்தில் பேணுவதற்குத் தேவையான திட்டங்களுடன் நாம் பணியாற்றி வருகிறோம். இந்தப் பாதை நமது நாட்டை மிக வலுவானதொரு பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று நாம் நம்புகிறோம்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரியாஸ் பாறூக், தனுர திஸாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *