உள்நாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மாதம் ரூ.10,000 கொடுப்பனவு வழங்க தீர்மானம்

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர்.

குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.

சிறு குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனால் சமூகத்தில் எழும் பிரச்சினைகளில் தலையிடுமாறு இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) வழங்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். 

இதற்கு அமைய வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் சென்ற பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலராக இருந்தாலே இந்தக் கொடுப்பனவு ஏற்புடையது என்றும், இதனை நடைமுறைப்படுத்த முதற்கட்டமாக ரூ.10 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேநேரம், இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இதன் பின்னர் மாவட்ட செயலகங்களின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மிகவும் சாதகமான இந்தப் பணி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இங்கு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய பெண் பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதுவரையில் 50 பெண் பொலிஸ் பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதற்கும், 2600 பெண் கான்ஸ்டபில்களை இணைத்துக் கொள்வதற்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. 

அத்துடன், தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு சமூக ஊடகங்களில் பிரசார நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ லங்கா பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் பேசும் குடும்ப நல சுகாதார சேவையாளர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். தமிழ் மொழியில் கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையைப் பூர்த்தி செய்த மாணவ மாணவியர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது பற்றி விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படும் இந்நாட்டு சிறுவர்கள் பற்றிய சகல தகவல்களையும் சேகரித்து தேசிய தகவல் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலையீட்டுடன் தகவல் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும், இவ்வருட இறுதிக்குள் இதனைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீதியை விரைவில் நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் இதன் பின்னரான சூழ்நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு சகல நிறுவனங்களும் உடனடியாக ஒன்றிணைந்த முறையில் செயற்பட வேண்டிதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. 

இதற்கு அமைய, பிரதேச செயகங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, ஸ்ரீலங்கா பொலிஸ் உள்ளிட்ட சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளை ஒரு குழுவாக ஒன்றிணைத்து செயற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அல்லது ஏனைய சம்பவங்கள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது அவசர நடவடிக்கை குறித்து விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். அத்துடன், வட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரிவிக்க முடியும் என்றும், கூடிய விரைவில் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல், சகல முன்பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவை இலவசமாக வழங்குதல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்புடனான ஓய்வூதியம் வழங்குவது ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை அடுத்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க சேவையில் உள்ள பெண்களின் இடமாற்றங்ளின் போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள், முன்பள்ளி மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அதேபோல, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இது தொடர்பில் குழு குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ரி. வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *