உள்நாடு

டை, கோட் அணிந்து கொண்ட ஆளும் தரப்பு அமைச்சர்களுக்கு இன்று கிராமத்தில் வாழும் விவசாயிகள் ஞாபகத்துக்கு வருவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தடவை நான் விவசாயிகளின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்பும்போது, ஆளும் தரப்பு அமைச்சர்களின் கூற்றுகளுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், இரசாயன பசளைகள் முதல் தேவையான கருவிகள் வரை சகலதுமே குறைந்த விலையில் கிடைக்கின்றன, உற்பத்திப் பொருட்களுக்கும் நல்ல விலை கிடைக்கின்றது என்றவாறு விவசாய அமைச்சர் லால்கந்த அவர்களும், பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அவர்களும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கூறுவது போன்று களத்தில், நடைமுறையில் அவ்வாறு ஏதுமில்லை. தற்போது விவசாயிகளுக்கு உயர்தர விதைகளும் உரங்களும் கிடைத்தபாடில்லை. உரங்களின் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இவை சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்தபாடுமில்லை. இரசாயன உரங்களும் தரமற்றே காணப்படுகின்றன. இறுதியில் யானை- மனித மோதல் மற்றும் ஏனைய விலங்குகளின் சேதங்களுக்கு மத்தியில் அறுவடை செய்யும் வேளைகளில், விவசாயிக்கு இலாபம் ஈட்டிக்கொள்ளும் மட்டத்தில் விற்பனை விலைகள் அமைந்து காணப்படுவதுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மொனராகலை, புத்தல பிரதேசத்தில் இன்று (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் சமயங்களில், அத்தகைய எந்தவிதமான பிரச்சினைகளும் அவர்களுக்கு இல்லை என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது. களத்தில், வயல்வெளிக்கு வந்து பார்க்கும் போது விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கின்றது. இலங்கையில் தற்போது விவசாயம் தோல்வியடைந்துவிட்டது என்ற கருத்தை IMF கூட அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. IMF அதிகாரிகளுடன் டை கோட் அணிந்து பேசும் அதேவேளையில், கிராமத்தில் வாழும் விவசாயிகளை தற்போதைய அமைச்சர்கள் மறந்துபோகின்றனர். இது தான் இன்று நடந்துள்ளது. தேர்தல்களுக்கு முன்பு வயல்வெளிகளுக்குள் இறங்கியவர்கள் இன்று டை கோட் அணிந்து விவசாயிகளின் பிரச்சினைகளை மறந்துவிட்டனர். விவசாயிகளின் துயரத்திற்கும் வலிக்கும் எந்தவித முன்னேற்றகரமான தீர்வுகளையும் இந்த அரசாங்கம் முன்வைத்தபாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 IMF கூட இப்போது மக்கள் பிரச்சினைகளைக் கேட்க தயாரில்லை.

IMF, தற்போது எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல் நடத்த வருவதில்லை. மக்களின் துயரத்தையும் வலியையும் நான் அவர்களிடம் தெரிவிப்பதே இதற்கு காரணமாகும். விவசாயிகள் முதல் மீனவர் வரை, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் என சகல பரப்புகளைச் சேர்ந்தவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் IMF அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளேன். தற்போது IMF, மக்கள் துயர் தொடர்பில் கலந்துரையாடவோ ஆராயவோ தயாரில்லை. விவசாய அமைச்சரும், பிரதி அமைச்சரும் கூட இப்போது விவசாயிகளை மறந்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

🟩 நாம் IMF பக்கமில்லை, விவசாயிகளின் பக்கமே இருக்கிறோம்.

நான் IMF பக்கமோ அல்லது அரசாங்கத்தின் பக்கமோ இல்லை. விவசாயிகளின் பக்கமே நான் இருக்கிறேன். அரசாங்கத்துடன் எனக்கு எத்தவித டீல்களும் இல்லை. என்னுடைய டீல் மக்களுடனே காணப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவராக நான் மக்கள் பிரச்சினைகளை பேசும்போது, தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் மைக்ரோபோன்களை துண்டித்து வருகின்றது. விவசாயிகளின் துயர் தொடர்பில் பேசுவதற்கும் கூட பாராளுமன்றத்தில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்போது ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் இருந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்கின்றனர். களத்தில் இவர்கள் இல்லை. களத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இவர்களுக்கு தெரிவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 விவசாயிகளின் உரிமைகள் எந்த வகையிலும் குறைக்கப்படக்கூடாது.

எந்த வகையிலும் விவசாயிகளுக்கு காணப்படும் உரிமைகளில் வெட்டுக்களைச் செய்யும் வேளைகளையோ அல்லது குறைப்புகளைச் செய்யும் வேளைகளையோ செய்யக் கூடாது. விதைகளையும், உரங்களையும் முறையாக பெற்றுக் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் அறுவடைக்கு உத்தரவாத விலை கிடைக்க வேண்டும். சிறிய நெல் ஆலை உரிமையாளர்களை நாம் பலப்படுத்தப்பட வேண்டும். இந்த சிறிய நெல் ஆலை உரிமையாளர்களைப் பலப்படுத்துவதன் மூலம் நியாயமான விலைக்கு அறுவடையை விற்பனை செய்யலாம் என்று எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 பொய் சொல்வது விவசாயிகள் அல்ல, அமைச்சர்கள் தான் பொய் சொல்கின்றனர்.

அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உர மானியம் கூட இன்னும் பெற்றுக் கொடுத்த பாடில்லை. முன்பு அரசாங்கங்கள் பல்வேறு கட்டங்களில் விவசாயிகளுக்கு உர மானியங்களைப் பெற்றுக் கொடுத்து வந்தன. இப்போது விவசாயிகளால் பணம் செலுத்தியே உரத்தைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.10,000 கொடுத்தாலும் தற்போது விவசாயிகளுக்குத் தேவையான உரம் சந்தையில் இல்லை. பொய் சொல்வது விவசாயிகள் அல்ல, தற்போதைய அரசாங்கமும் அமைச்சர்களும்தான் பொய் கூறி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *