மொஹமட் லஃபார் தாஹிர் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்
சவுதி அரேபியாவின் ஜித்தாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான கவுன்சில் ஜெனரல் ஓய்வுநிலை நீதியரசர் எம். ரி. மொஹமட் லஃபார் தாஹிர் நேற்று திங்கட்கிழமை [11] தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நீதியரசர் லஃபார் தாஹிர் நீதித்துறை சேவையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவர். பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அவர், அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக பணியாற்றினார். நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும், இலங்கை சட்டக் கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
நீதித்துறையில் காலதாமதங்களை குறைப்பதற்காக தனது நடவடிக்கைகளால் 2007 ஆம் ஆண்டில் ஒரே நாளில் 120 வழக்குகளுக்கான தீர்ப்புகளை வழங்கி நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்கு கால்கோளாக அமைந்தார் .
கவுன்சில் ஜெனரல் லஃபார் தாஹிர் கொழும்பு விவேகானந்தா தேசிய பாடசாலை மற்றும் மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றவராவார்.
இக்கடமைப்பு நிகழ்வில் கவுன்சிலர் ஜெனரல் லாபர் தாஹிர் உரையாற்றுகையில்,
“ஜித்தா மற்றும் சவுதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு தூதரகம் திறமையான மற்றும் பயனுள்ள தொழில் நல சேவையை வழங்குவதுடன், இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்த தூதரகத்தின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் துணை புரியும்” என தெரிவித்தார்.




(றிபாஸ்)
