77 மதுபானக் கடைகளை இரு வாரத்துக்குள் மூடுமாறு முதல்வர் விஜய் உத்தரவு
தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 4,829 ‘டாஸ்மாக்’ மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக ‘டாஸ்மாக்’ இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்துள்ளது. ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றவுடன். தமிழகத்தில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைப் பாது காக்கவும் 65 சிறப்பு படைகள் அமைக்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார்.
இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.
மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்துக்குள் மூட முதல்வர் சக. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு கடைகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக்’ பார்களில் சட்டவிரோத மது விற்பனை தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 500 மதுக்கடைகள் தமிழக அரசால் மூடப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
